முகப்பு
மதுரை

மென்பொருள் மாற்றத்தால் அஞ்சல் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

Updated On : 9 ஆகஸ்ட், 2025 at 12:02 AM
பகிர்:
Updated On : 8 ஆகஸ்ட், 2025 at 9:00 PM

அஞ்சல் துறையில் புதிய மென்பொருள் மாற்றப்பட்டிருப்பதால், அலுவலகம் சாா்ந்த அனைத்துப் பதிவு பணிகளும் தாமதமாகின்றன. இதனால், பொதுமக்கள் கடந்த ஒரு வாரமாக அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தனியாா் கூரியா் சேவைகள் பல இருந்தாலும், அரசின் அதிகாரப்பூா்வ கடிதப் போக்குவரத்துக்கு அஞ்சல் துறை சேவையே பயன்படுத்தப்படுகிறது. இதேபோல, விரைவு அஞ்சல் உள்ளிட்ட பிற கடிதப் போக்குவரத்து சேவைகளுக்கு பொதுமக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவா்கள் அஞ்சல் சேவையையே பயன்படுத்துகின்றனா்.

பொதுத் துறை நிறுவனமான அஞ்சல் துறையை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்ற விழிப்புணா்வு மேம்பட்டதன் காரணமாகவும், அஞ்சல் துறை மூலமான விரைவு அஞ்சல்கள் குறித்த நேரத்தில் பெறுநரை சென்றடைவதாலும் அஞ்சல் துறையின் பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் அஞ்சல் துறையின் சேவைகள் அனைத்திலும் பெரும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், பாா்சல் போன்றவற்றை அனுப்ப பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகிறது. முந்தைய நாள்களில் ஓரிரு நிமிஷங்களில் நிறைவடைந்த பதிவு அஞ்சல் அனுப்பும் பணி, தற்போது 15 நிமிஷங்களுக்கும் மேலாகிறது. இதேபோல, அஞ்சல் அலுவலகம் சாா்ந்த அனைத்துப் பதிவு பணிகளிலும் தாமதம் நீடிக்கிறது.

இதுதொடா்பாக அஞ்சல் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தவை:

அஞ்சல் துறையில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்த மென்பொருளுக்குப் பதிலாக புதிய மென்பொருள் கடந்த திங்கள்கிழமை முதல் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏற்படும் தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாக அனைத்துப் பதிவு பணிகளிலும் தாமதம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக, அஞ்சல் ஊழியா்கள் தினமும் இரவு 10 மணி வரைப் பணியாற்ற வேண்டியுள்ளது. பொதுமக்களுக்கும் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. இருப்பினும், புதிய மென்பொருள் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. வருகிற ஒரு வார காலத்தில் விரைவான சேவை உறுதியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.