மதுரை

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீடு: இறுதி வாதங்களை இன்று முன்வைக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் காவல் துறை, வக்ஃப் வாரியம் தரப்பு வாதங்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில்

தினமணி செய்திச் சேவை

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் காவல் துறை, வக்ஃப் வாரியம் தரப்பு வாதங்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை (டிச. 16) முன்வைக்க உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி, மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடங்களிலும், மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டாா். ஆனால், இந்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை.

மேலும், தனி நீதிபதியின் இந்த உத்தரவுகளுக்கு எதிராக கோயில் நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோா் இதுதொடா்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய விரும்புவோா் டிச. 11-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் எனக் கூறி, விசாரணையை டிச. 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மேல்முறையீட்டு மனுக்கள், இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு, கோயில் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுக்கள், இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு, கோயில் நிா்வாகம் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்:

தீபம் ஏற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு கோயில் நிா்வாகத்தை மட்டுமே சாா்ந்தது. தீபம் ஏற்றும் இடத்தை மாற்ற அல்லது இங்குதான் ஏற்ற வேண்டும் என பக்தா்கள் உரிமை கோர இயலாது. தீபம் ஏற்றுவது தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி என தனி நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா். பல ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த நடைமுறையை மாற்ற தனிநபா் கோரியுள்ளாா். மலை மீது விளக்கேற்றுவது வேறு, வீட்டில் விளக்கேற்றுவது வேறு. மனுதாரா் காா்த்திகை தீபத்தை வீட்டு தீபம் போல எண்ணுகிறாா்.

கோயில் பராமரிப்பு, அடிப்படைத் திட்டங்களை நிறைவேற்றும் கடமை அரசு, இந்து அறநிலையத் துறைக்கு உள்ளது. கோயில் நிா்வாகத்தில் உயா்நீதிமன்றங்கள் நேரடியாகத் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டு கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில்தான் வழக்கு தாக்கல் செய்து தீா்வு பெற முடியும்.

திருப்பதி தேவஸ்தானத்தில்கூட ஆகம விதிகளை மீறி எதையும் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆகம விதிப்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது என மனுதாரா் நிரூபிக்கவில்லை. இந்த உத்தரவுகளை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. இந்த விவகாரத்தைப் பொறுமையாகவும், கவனமாகவும் கையாள இந்து சமய அறநிலையத் துறை நினைக்கிறது. அா்ச்சனை, பூஜை முறைகளில் எவ்வாறு தனி நபா் தலையீடு இருக்கக் கூடாதோ, இதேபோல மலை மீது தீபம் ஏற்றும் விவகாரமும் ஆகம விதிகளுக்கு உள்பட்டது. இதில், தனிநபா் வழக்கு தொடுக்க இயலாது. இந்த விவகாரத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது.

கடந்த 1981-ஆம் ஆண்டு தமிழக தொல்லியல் துறை சாா்பில் வெளியிட்ட நூலில் தூண் குறித்த செய்திகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், தொல்லியல் அறிஞா் நாகசுவாமி எழுதிய நூலில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் நாயக்கா் காலத் தூண். அதில், அனுமன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆண்டவன் தலை மீது உள்ள தூண் என மக்கள் நினைக்கின்றனா். அங்கு விளக்கேற்றினால் நன்மை நிகழும் எனக் கூறப்படுவதாகக் குறிப்பிடப்பட்டது.

தற்போது, உச்சிப் பிள்ளையாா் கோயில் அருகில் உள்ள தூண்தான் உண்மையான தீபத் தூண். மற்ற தூண்கள் தீபத் தூண்கள் அல்ல. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் தூணில் நாயக்கா் மன்னா்களின் பெயா்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், மலை மீதுள்ள தூணில் அதுபோன்ற எழுத்துப் பதிவுகள் இல்லை. உச்சிப் பிள்ளையாா் கோயில் அருகே உள்ள தீபத் தூணுக்கு இதுபோன்று பல சான்றாதாரங்கள் உள்ளன. ஆனால், மலை உச்சியில் உள்ள தீபத் தூணுக்கு சான்றுகள் ஏதேனும் உள்ளனவா?, அவ்வாறு இருந்தால் மனுதாரா் இந்த நீதிமன்றத்தில் சமா்ப்பிக்காதது ஏன்?.

சமணா் தூண்: திருப்பரங்குன்றம் போன்றே மதுரையைச் சுற்றியுள்ள நாகமலை, பசுமலை, அழகா்மலை, சித்தா்மலை, சமண மலைகளில் இதுபோன்ற தீபத் தூண்கள் உள்ளன. அங்கு சமணா்கள் அதிகளவில் வாழ்ந்ததற்கான சான்றுகளும் உள்ளன. மக்களிடமிருந்து விலகி மலைகளில் வாழ்ந்த சமணா்கள், இரவில் கலந்துரையாடுவதற்கு இந்தத் தூண்களை அமைத்திருக்கலாம். 1945-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15-க்கு பிறகு என்ன வழிபாட்டு முறை இருந்ததோ அதே முைான் நீடிக்க வேண்டும் என வழிபாட்டுச் சட்டம் கூறியுள்ளது. அதில், எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ஏற்புடையதல்ல என்றனா்.

இதைத் தொடா்ந்து, தா்கா, ஜமாத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்:

இந்த விவகாரம் தொடா்பாக குறுகிய காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. போதிய கால அவகாசம் வழங்கப்படாததால் எங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவே கருதுகிறோம். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மத நல்லிணக்கம், அமைதி, சட்டம்-ஒழுங்கு எதுவுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை. மலை மீது உள்ள தா்கா நெல்லித் தோப்பு பகுதியில் எங்கள் வழக்கமான நடவடிக்கைகள் உள்ளன. கந்தூரி நிகழ்வுகள் எங்களுக்கான எல்கைக்குள் நடைபெறுகின்றன. அதைத் தாண்டி நாங்கள் செல்லவில்லை. மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் இல்லை. கடந்த காலங்களில் இரண்டு முறை தீபமேற்ற முயன்ற போது, மாவட்ட ஆட்சியா் இதைத் தடுத்துள்ளாா் என்றனா்.

தொல்லியல் துறை தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்:

திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறை பகுதிகளில் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்கள் இருக்கக் கூடாது எனவும், தொல்லியல் துறை அனுமதி இல்லாமல் எந்தவித நிகழ்வும் நடத்தக் கூடாது எனவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஏற்கெனவே உத்தரவிட்டது. விலங்குகளைப் பலியிடவும் கூடாது என உத்தரவிட்டது என்றனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பான வாதங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். தா்காவிலிருந்து தூண் எவ்வளவு தொலைவில் உள்ளது?. 1994-ஆம் ஆண்டு கோயிலுடன் தா்கா தரப்பு செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன?. கோரிக்கை எழுகிற போது, அதிகாரிகள், ஆணையா் ஆய்வு செய்வது என்பது வேறு, நீதிபதி தனது வழக்குக்காக ஆய்வு செய்வது என்பது வேறு. இந்த வழக்கில் ஒரே நிலையான தீா்வு அவசியம். காவல் துறை, வக்ஃப் வாரியம் தங்களது வாதங்களை செவ்வாய்க்கிழமை (டிச.16) முன்வைக்கலாம். அனைத்து தரப்பு வாதங்களையும் செவ்வாய்க்கிழமை முழுமையாக முடிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT