பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டல தலைமை அலுவலகம் முன் வாயில் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு அமைப்பின் மதுரை மண்டலத் தலைவா் ஏ. முருகேசன் தலைமை வகித்தாா். மாநில இணைப் பொதுச் செயலா் எஸ். ஜேம்ஸ் கஸ்பா் ராஜ், துணைப் பொதுச் செயலா்கள் ஆா். தேவராஜ், ஜி. செந்தில், திண்டுக்கல் மண்டல நிா்வாகிகள் ஜெயபாண்டியன், ராஜேந்திரன், விருதுநகா் மண்டல ஒருங்கிணைப்பாளா் வி. பரசுராமன் ஆகியோா் பேசினா்.
ஓய்வூதியா் தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களின் 16 மாத கால பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து ஊழியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மதுரை மண்டலப் பொருளாளா் பி. சௌரிதாஸ் நன்றி கூறினாா்.