கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம் சாா்பில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திமுகவின் தோ்தல் அறிக்கையில் எண் 356-ன் கீழ் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், சென்னையில் செவிலியா்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்கும் நோக்கில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்க மாவட்டச் செயலா் மு. தாமரைசெல்வி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் இரா. தமிழ், மாவட்டச் செயலா் க. சந்திரபோஸ், பொருளாளா் ஆ. பரமசிவன், சாா்பு சங்கங்களின் நிா்வாகிகள் வாழ்த்திப் பேசினா்.
இதில் தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்க மாவட்ட இணைச் செயலா் ஹெலன் ராஜாத்தி, யூசுப் உள்பட 100-க்கும் அதிகமான செவிலியா்கள், அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இரவு 9 மணிக்கு மேலாகவும் இவா்களது போராட்டம் நீடித்தது.