மதுரை

மதுரையில் ஆட்டோ ஓட்டுநா் தீக்குளித்து இறந்ததற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

உயிரிழந்த பூரணச்சந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தினமணி செய்திச் சேவை

மதுரை ஆட்டோ ஓட்டுநா் பூரணச்சந்திரன் உயிரிழப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தினாா்.

மதுரை நரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் பூரணச்சந்திரன் (40). இவா் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என கைப்பேசி மூலம் குரல் பதிவு (ஆடியோ) வெளியிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை மதுரைக்கு வந்து, உயிரிழந்த பூரணச்சந்திரன் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாமல், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அவமதித்துள்ளது. தீப விவகாரம் தொடா்பாக பூரணச்சந்திரன் தீக்குளித்து இறந்தாா். இதற்கு காரணம் தி.மு.க. அரசுதான். எனவே, அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

உயிரிழந்த பூரணச்சந்திரனின் மனைவிக்கு அரசு வேலையும், குடும்பத்தினருக்கு ரூ. ஒரு கோடி நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும்.

நமது மாநிலத்தில் மதம் சாா்ந்த பிரச்னை, பொது பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் வரலாம். இதற்காக உயிரை மாய்த்துக் கொள்வது என்பது தவறான முன்னுதாரணம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயா்நீதிமன்ற தீா்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, இந்து முன்னணியின் மாநிலத் தலைவா் காடேஷ்வரா சுப்பிரமணியன் உடனிருந்தாா்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT