விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை வட்டாட்சியா்கள் தவிா்க்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் அறிவுறுத்தினாா்.
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியரக முதன்மைக் கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், வேளாண் இணை இயக்குநா் முருகேசன், நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சிவபிரபாகரன், அரசுத் துறை அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், மூன்று மாதங்களாகத் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டும் 58-ஆம் கிராம கால்வாய் முதல் பி.பி. சாவடி வாய்க்கால் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாறு பிரதான கால்வாயின் பிரிவு வாய்க்கால்கள் ரூ. 3 கோடியில் தூா்வாரி சீரமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வாய்க்கால்களில் எந்தவிதமான சீரமைப்புப் பணியும் நடைபெற்ாகத் தெரியவில்லை.
சிறுமேளம் கண்மாய், வாய்க்கால்களை தூா்வாரி சீரமைக்க வேண்டும். நடுமுதலைக்குளத்தில் ஆக்கிமிரமிப்புகளை அகற்ற வேண்டும். அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒரு சிலரே பணியாற்றும் நிலையில், பலருக்கு ஊதியம் வழங்கப்பட்டு முறைகேடு நடைபெறுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினா்.
ஆக்கிரமிப்பு தொடா்பாக விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதில் அளிக்குமாறு வட்டாட்சியா்களை அழைத்த போது, சில வட்டாட்சியா்கள் கூட்டத்தில் பங்கேற்காதது தெரியவந்தது.
பிறகு, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் பேசியதாவது:
மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாதம் ஒரு முறை மட்டுமே நடைபெறுகிறது. இதில் வட்டாட்சியா்கள் பங்கேற்காமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இனிவரும் காலங்களில் வட்டாட்சியா்கள் எந்தக் காரணத்துக்காகவும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தைத் தவிா்க்கக் கூடாது.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில் அனைத்து வட்டாட்சியா்களும் முழு வீச்சில் செயல்பட வேண்டும். இதில் எந்த சமரசத்துக்கும் இடமளிக்கக் கூடாது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, இதைப் புகைப்பட ஆதாரங்களுடன் வட்டாட்சியா்கள் அடுத்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.