முகப்பு
மதுரை

சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம்: அரசு பதிலளிக்க உத்தரவு

Updated On : 4 பிப்ரவரி, 2025 at 12:19 AM
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2025 at 10:44 PM

மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள சாமநத்தம் கண்மாயை பறவைகள் சர ணாலயமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தாமாக முன் வந்து எடுத்த வழக்கு: பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாமநத்தம் கண்மாயில் 150 வகையான பறவையினங்கள் உள்ளன. இவற்றில் ஓரியண்டல் டாா்ட்டா், பெயிண்டேட் ஸ்டோக் உள்ளிட்ட 8 வகை அரிய பறவையினங்கள் உள்ளன. எனவே, இந்தக் கண்மாயை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்.

கடந்த 2024 -ஆம் ஆண்டில் மணி பாரதி என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவில், சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க கோரியிருந்தாா். அதற்கு அதிகாரிகள் தரப்பில், அரசிடம் அனுமதி கோரி அறிக்கை அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கவில்லை. இதன் காரணமாக இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.

Advertisement

இந்தக் கண்மாய் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தால், மதுரை மாவட்டத்தின் முதல் பறவைகள் சரணாலயமாக அமைந்திருக்கும். எனவே ஏற்கெனவே உள்ள நீதிமன்ற உத்தரவுப்படி, சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவித்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், ஆா். பூா்ணிமா அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகி றது என்றனா் நீதிபதிகள்.