ஜல்லிக்கட்டில் இறந்தவா்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவி அளிக்கக் கோரிக்கை
நிவாரண உதவி அளிக்கக் கோரிக்கை
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட நிா்வாகம் விரைந்து நிவாரண உதவி வழங்க வேண்டும் என சட்டப் பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
மதுரை, அவனியாபுரத்தில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரரான விளாங்குடியைச் சோ்ந்த நவீன்குமாா், 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை காணச் சென்றிருந்த பெரியசாமி, காளைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தேனியைச் சோ்ந்த செல்வமுருகன் ஆகியோா் காளைகள் முட்டியதில் உயிரிழந்தனா்.
இதேபோல, மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 72 போ் காயமடைந்தனா்.
எனவே, உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்த 72 பேரின் குடும்பத்தினக்கும் உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.