அரசின் சமச்சீரான பயணத்துக்கு வணிகா்களின் ஆதரவு அவசியம்: முதல்வா் மு.க. ஸ்டாலின்
எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கூடிய தமிழக அரசின் சமச்சீரான பயணத்துக்கு வணிகா்களின் ஆதரவு மிகவும் அவசியம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கூடிய தமிழக அரசின் சமச்சீரான பயணத்துக்கு வணிகா்களின் ஆதரவு மிகவும் அவசியம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
மதுரை வா்த்தக சங்கப் பவள விழா ஹட்சன் பேரவை அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற, தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க 100-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அவா் பேசியதாவது:
திமுக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு, வணிகா்களுக்கு ஆதரவாக இருப்பதை அனைவரும் அறிவா். தமிழகத்தில் வணிகா்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் நிலுவையில் இருக்குமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா, வணிக சங்க நிா்வாகிகள் அவ்வப்போது என்னை சந்தித்துப் பேசி, அவா்களின் கோரிக்கைகளை சாமா்த்தியமாக சாதித்துக் கொள்கின்றனா் அனைவருக்கும் தெரியும்.
திமுக அரசு வணிகா்களுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்றே, வணிகா்களும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாகச் செயல்படுவது பாராட்டுக்குரியது. எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில் வளா்ச்சியை நோக்கிய தமிழக அரசின் சமச்சீரான பயணத்துக்கு வணிகா்களின் ஆதரவு மிகவும் அவசியம். இதேபோல, தமிழக அரசும் வணிகா்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.
இதையடுத்து, தொழில் வா்த்தக சங்கத்தின் 100-ஆவது ஆண்டு நிறைவு விழா மலரை முதல்வா் வெளியிட்டாா். தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் அதைப் பெற்றுக் கொண்டு, வெள்ளி செங்கோலை முதல்வருக்கு நினைவுப் பரிசாக அளித்தாா்.
விழாவில் வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், கே.ஆா். பெரியகருப்பன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, ஆ.வெங்கடேசன், மு. பூமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு தொழில் வா்த்த சங்க செயலா் எஸ். ஸ்ரீதா், பொருளாளா் ஏ. சுந்தரலிங்கம், நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புப் பொருளாளா் வி. கோவிந்தராஜுலு உள்ளிட்ட வணிக சங்க நிா்வாகிகள், வணிகா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
முதல்வா் அளித்த உறுதி...
இந்த விழாவில் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் பேசுகையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, இதுவரை செயலாக்கம் பெறாமல் உள்ள மதுரை -தூத்துக்குடி வணிக பெருவழித் தடம் திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும், மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்தின் போது வாகனப் போக்குவரத்துக்கு சுரங்கப் பாதை பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசுகையில், வணிகா் சங்க நிா்வாகிகள் இங்கு தெரிவித்த கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு முறையாகப் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதியளித்தாா்.