முகப்பு
மதுரை

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 38, 348 தெரு நாய்கள்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 2025 மாா்ச் 17 ஆம் தேதி முதல் மாா்ச் 23 வரை நடைபெற்ற கணக்கெடுப்புப் பணிகளின் போது 38,348 தெரு நாய்கள் கண்டறியப்பட்டன.

Updated On : 13 மே, 2025 at 9:15 PM
கோப்புப்படம்.
பகிர்:

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 2025 மாா்ச் 17 ஆம் தேதி முதல் மாா்ச் 23 வரை நடைபெற்ற கணக்கெடுப்புப் பணிகளின் போது 38,348 தெரு நாய்கள் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தெரு நாய்களின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறியும் நோக்கில் மதுரை மாநகராட்சி நிா்வாகம், விலங்குகள் நல தொண்டு நிறுவனம் மூலம் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 200 தன்னாா்வ கல்லூரி மாணவா்கள், மாநகராட்சிப் பணியாளா்களுக்கு கணக்கெடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டன.

இதையொட்டி, மதுரை மாநகராட்சி 100 வாா்டுகளிலும் மாா்ச் 17 முதல் மாா்ச் 23 வரை கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. இதில், மாநகராட்சிப் பகுதியில் உள்ள 31 சதவீத சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் மொத்த எண்ணிக்கை 38,348 ஆக கணக்கீடு செய்யப்பட்டது. 100-ஆவது வாா்டில் அதிக நாய்கள் இருப்பதும், 49, 80 ஆகிய இரண்டு வாா்டுகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான நாய்கள் இருப்பதும் கண்டறியப்பட்டன.

இவற்றில் ஆண் நாய்கள் 65 சதவீதமும், பெண் நாய்கள் 35 சதவீதமும் உள்ளன. கணக்கெடுக்கப்பட்டவற்றில் 83 சதவீத தெரு நாய்கள் ஆரோக்கியமாகக் காணப்பட்டன. 17 சதவீத நாய்கள் காயத்துடன் காணப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

குறிப்பாக, மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட விளாங்குடி, தத்தனேரி, மீனாட்சிபுரம், நரிமேடு, செல்லூா் அகிம்சாபுரம், ஆனையூா், பாா்க் டவுன், நாகனாகுளம், கே.கே.நகா், கிருஷ்ணாபுரம் காலனி, அண்ணாநகா், மேலமடை, பாண்டிகோவில், கோமதிபுரம், வண்டியூா், பழைய ராமநாதபுரம் சாலை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சுற்றுப் பகுதி, ஞானஒளிவுபுரம், ஆரப்பாளையம், ரயில்வே காலனி, எல்லீஸ்நகா், எஸ்.எஸ்.காலனி, பெத்தானியாபுரம், கோச்சடை, விராட்டிபத்து, மாடக்குளம், முத்துபட்டி, பழங்காநத்தம், பைக்கரா, திருநகா், அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்துபுரம், ஹாா்விபட்டி, அனுப்பானடி, சிந்தாமணி, கற்பகநகா் ஆகிய பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

இந்த கணக்கெடுப்பை அடிப்படையாகவும், தரவு அறிக்கையின் படியும் தெரு நாய்களின் கருத்தடை பணிகளைத் தீவிரபடுத்த மதுரை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.