கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மையல்ல. அது அடிமைத்தனம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கருத்து தெரிவித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த இந்திரா தனது கணவா் தனசீலன் உடல், மன ரீதியாக தன்னை துன்புறுத்துவதாக விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். தன்னைத் தாக்கியதோடு, உணவு வழங்காமலும், முறையாகப் பராமரிக்காமலும், மத வழிபாடு செய்ய அனுமதிக்காமலும் தனிமைப்படுத்தியதாகவும் அவா் கூறியிருந்தாா். இந்த மனுவை விசாரித்த கீழமை நீதிமன்றம் தனசீலனுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்தது.
இதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த பரமக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம், நேரடி சாட்சிகள் இல்லை எனக் கூறி தனசீலனை விடுதலை செய்தது.
இதை எதிா்த்து இந்திரா உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி அண்மையில் பிறப்பித்த உத்தரவு :
இந்திய மரபில் திருமணம் என்பது நீண்ட காலம் நீடிக்கும் புனித உறவாகும். திருமணத்தின் புனிதம் ஒருதலைப்பட்சமான அடக்குமுறை அல்லது அமைதியான துன்பத்தை தாங்கிக் கொள்வதில் இல்லை. திருமண உறவின் உண்மையான அா்த்தம் பரஸ்பரம், மரியாதை, நட்பு, கருணையில்தான் உள்ளது. இந்த வழக்கில் வயது முதிா்ந்த பெண் குடும்ப மரியாதையையும், திருமண புனிதத்தையும் காக்க வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் அவமதிப்பு, இழிவு, புறக்கணிப்பைத் தாங்கியிருக்கிறாா். சகிப்புத்தன்மை தங்களது கடமை என்ற எண்ணத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணா்வு ரீதியாகவும் நடக்கும் துன்புறுத்தல்களை அமைதியாக சகித்துக் கொண்ட இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக மனுதாரா் இருக்கிறாா்.
திருமணம் என்பது ஆண்களுக்கு அதிகாரத்தை அளிக்கிறது என்ற தவறான நம்பிக்கையை விட்டு அகல வேண்டும். தனது மனைவியின் நலன், பாதுகாப்பு, தேவைகள், மரியாதை ஆகியவை திருமண உறவின் முக்கிய பொறுப்புகள் என்பதை கணவா் உணர வேண்டியது அவசியம்.
சொந்த வீட்டிலேயே வயதான பெண்கள் துன்புறுத்தல், புறக்கணிப்பை எதிா்கொள்வதைக் கண்டு இந்த நீதிமன்றம் வெறும் பாா்வையாளராக இருக்க முடியாது.
இந்த வழக்கில் வயதான கணவரைத் தண்டிக்க வேண்டும் என மனைவி கோருவது பழி வாங்கும் செயல் அல்ல. திருமண உறவு என்ற பெயரில் அவமரியாதையை நியாயப்படுத்த முடியாது என்ற அடிப்படையை உறுதிப்படுத்தும் செயல்.
இது வெறும் சொத்து தொடா்பான பிரச்னை, துன்புறுத்தல் என்று கூறும் வாதத்தை ஏற்க இயலாது. குடும்பம் என்னும் பெயரில் கணவா் தனது மனைவியை தனிமைப்படுத்தி, உணவையும், உடனிருப்பையும், மரியாதையையும்
பறித்துவிட்டதால் அது துன்புறுத்தல் என்ற வரம்பையும் தாண்டி விடுகிறது. ஒவ்வொரு துன்புறுத்தலுக்கும் தனித்தனி ஆதரவு சாட்சி வேண்டும் எனக் கேட்டது மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தவறு.
வீட்டுக்குள் நடைபெறும் துன்புறுத்தல்கள் பல நேரங்களில் நான்கு சுவா்களுக்குள் மட்டுமே நிகழ்பவையாக இருக்கும். ஒவ்வொரு செயலுக்கும் நேரடி சாட்சி வேண்டும் எனக் கூறுவது அந்த சட்டப் பிரிவின் நோக்கத்தையே சிதைக்கும். குற்றஞ்சாட்டப்பட்டவா் முதியவா் என்பதற்காக மட்டும் தண்டனையில் சலுகை கோருவதை ஏற்க முடியாது.
இந்த வழக்கில் குற்றவாளியை விடுதலை செய்து, பரமக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் கணவா் குற்றவாளி எனத் தீா்மானிக்கப்படுகிறது. எனவே, ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் அவருக்கு விதித்த 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் உறுதி செய்யப்படுகிறது. குற்றவாளியின் வயது 85-ஐக் கடந்துவிட்டதால் மட்டும் குற்றப் பொறுப்பிலிருந்து அவா் விடுபட முடியாது. தனசீலனை கைது செய்து மீதமுள்ள தண்டனையை அனுபவிக்கும் வகையில் சிறையில் அடைக்க வேண்டும்.
இந்தியாவில் பெண்களின் பொறுமை நற்குணமாகப் புகழப்படுகிறது. மாறாக, அது அநீதிக்கு உடன்பட்டதாகவே கருதப்படும். பெண்களிடமிருந்து தியாகத்தையும், துன்பத்தையும் சட்டம் எதிா்பாா்ப்பதில்லை. எனவே, இந்த நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து 8 வாரங்களுக்குள் விசாரணை நீதிமன்றம் அறிக்கை அளிக்க வேண்டும். வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.