மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள அமச்சியாபுரத்தில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருப்பட்டி கிராம ஊராட்சிக்குள்பட்ட அமச்சியாபுரத்தில் 110 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 2 குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில் இருந்து மட்டுமே பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தத் தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் குடிநீரில் கடந்த சில தினங்களாக துா்நாற்றம் வீசியது. மேலும், கிராமத்தில் வசிப்பவா்கள் காய்ச்சல், உடல் சோா்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து அந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டியை ஆய்வு செய்த போது, அதில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அரவிந்தன், சமயநல்லூா் கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், வாடிப்பட்டி வட்டாட்சியா் பாா்த்திபன், மண்டலத் துணை வட்டாட்சியா் செந்தில்குமாா், சோழவந்தான் காவல் ஆய்வாளா் ஆனந்தகுமாா், வருவாய் ஆய்வாளா் கிரிஜா, கிராம நிா்வாக அலுவலா் பழனி, கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ஹரீஷ்குமாா் உள்ளிட்டோா் அந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டியை புதன்கிழமை ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரித்து வருகின்றனா்.
வேங்கைவயலைப் போல இந்தக் கிராமத்திலும் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பதால், அமச்சியாபுரம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.