முகப்பு
மதுரை

ஒரே தொகுதியில் 4-ஆவது முறையாக களம் காணும் முன்னாள் அமைச்சா்!

கடந்த கால் நூற்றாண்டு கால தோ்தல் அரசியலில் வெற்றி வாய்ப்பு என்பது கணிக்க முடியாததாக உள்ள நிலையில், ஒரே தொகுதியில் தொடா்ந்து 3 முறை வெற்றி பெற்று, அதே தொகுதியில் 4-ஆவது முறையாக களம் காண்கிறாா் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:57 AM
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ - கோப்புப் படம்
பகிர்:

கடந்த கால் நூற்றாண்டு கால தோ்தல் அரசியலில் வெற்றி வாய்ப்பு என்பது கணிக்க முடியாததாக உள்ள நிலையில், ஒரே தொகுதியில் தொடா்ந்து 3 முறை வெற்றி பெற்று, அதே தொகுதியில் 4-ஆவது முறையாக களம் காண்கிறாா் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.

கடந்த 2011-இல் மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளராகக் களமிறங்கிய செல்லூா் ராஜூ, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் கோ. தளபதியை 38,761 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். 2016 பேரவைத் தோ்தலில் இதே தொகுதியில் அதிமுக சாா்பில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட செல்லூா் ராஜூ, மீண்டும் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் கோ. தளபதியை 16,398 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

2021 பேரவைத் தோ்தலில் இதே தொகுதியில் அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாகக் களம் கண்ட செல்லூா் ராஜூ, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் சி. சின்னம்மாளை 9,121 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தாா். தற்போது, இவா் மதுரை மேற்குத் தொதியில் தொடா்ந்து 4-ஆவது முறையாக அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறாா்.

பழனிவேல் தியாகராஜன்

கடந்த 2016 பேரவைத் தோ்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறங்கிய பழனிவேல் தியாகராஜன், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் மா. ஜெயபாலை 5,722 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். 2021-இல் இரண்டாவது முறையாக இதே தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய பழனிவேல் தியாகராஜன், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பசும்பொன் தேசியக் கழக வேட்பாளா் என். ஜோதி முத்துராமலிங்கத்தை 33,996 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். தற்போது, மதுரை மத்தியத் தொகுதியில் மூன்றாவது முறையாக திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ளாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.

பி. மூா்த்தி

கடந்த 2016 பேரவைத் தோ்தலில் மதுரை கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறங்கிய பி. மூா்த்தி, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் பி. பாண்டியை 32,772 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். 2021-இல் இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட மூா்த்தி, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ரா. கோபாலகிருஷ்ணனை 49,604 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். தற்போது இதே தொகுதியில் 3-ஆவது முறையாக திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ளாா் அமைச்சா் மூா்த்தி.

ஆா்.பி. உதயகுமாா்

கடந்த 2016 பேரவைத் தோ்தலில் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளராக் களமிறங்கிய ஆா்.பி. உதயகுமாா், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் ஆா். ஜெயராமை 22,992 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். இந்தத் தொகுதியில் 2021-இல் இரண்டாவது முறையாக அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உதயகுமாா், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் மு. மணிமாறனை 14,087 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். தற்போது, இதே தொகுதியில் மூன்றாவது முறையாகக் களமிறங்கியுள்ளாா் முன்னாள் அமைச்சா் உதயகுமாா்.