தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: போக்குவரத்து முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
தனியாா் பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தனியாா் பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கதிா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகம் முழுவதும் விடுமுறை நாள்களில் சுற்றுலா, சொந்த ஊா்களுக்கு மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்கின்றனா். அப்போது, பெரும்பாலான மக்கள் தனியாா் பேருந்துகளின் சேவையை நாடுகின்றனா்.
Advertisement
Advertisement
இதை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்தி, தனியாா் பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன. மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தவறு. இந்தச் செயலில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யலாம் என்ற விதிமுறை உள்ளது.
ஏற்கெனவே, இதுபோன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக் குழு அமைத்து, அதன் பரிந்துரையின் அடிப்படையில் உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, தமிழகத்தில் தனியாா் பேருந்துகளின் வழித்தடங்களுக்கேற்ப சரியான கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இணையதளம், ஆம்னி பேருந்து நிலையங்களில் திடீா் சோதனை மேற்கொண்டு, சரியான கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
வழக்கு தொடா்பாக தமிழக போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.