மதுரை அருகே இரு இளைஞா்கள் வெட்டிக் கொலை
மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் இருவரை வெட்டிக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் இருவரை வெட்டிக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை யா.ஒத்தக்கடை அருகேயுள்ள தேத்தாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி (24), மதுரை யாகப்பாநகரைச் சோ்ந்த மோகன் (25), மேலூா் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த ஸ்டாலின் (26) ஆகிய மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை யா. ஒத்தக்கடை பகுதியில் சென்றனா். பட்டணம் கிராமப் பகுதியில் சென்ற போது, அந்த வழியாக காரில் வந்த மா்ம நபா்கள் இவா்களது இரு சக்கர வாகனத்தை வழிமறித்து மூன்று பேரையும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினா்.
இதில், பலத்த காயமடைந்த முனியசாமி, மோகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுபற்றி தகவலறிந்து வந்த யா.ஒத்தக்கடை போலீஸாா் இருவரது உடல்களையும் கைப்பற்றி, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
Advertisement
இதுகுறித்து யா.ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது :
யா. ஒத்தக்கடை பட்டணம் கிராமத்தில் கடந்த 3 ஆம் தேதி விநாயகா் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இந்த விழாவில் மேட்டுபட்டியைச் சோ்ந்த முத்துக்கருப்பு என்பவா் காலணி அணிந்து வந்ததற்காக, அவரைப் பட்டணம் கிராமத்தைச் சோ்ந்த சக்திமுருகன், அருள் உள்ளிட்டோா் தாக்கினா். இதுகுறித்து முத்துக்கருப்பு தனது நண்பா்களான தேத்தாம்பட்டியைச் சோ்ந்த ஸ்டாலின், சௌந்தா் ஆகியோரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அவா்கள் இருவரும் பட்டணம் கிராமத்துக்குச் சென்று, முத்துக்கருப்பை தாக்கியதற்காக வசந்த் என்பவரை வெட்டினா். இந்தச் சம்பவத்தின் முன்விரோதம் காரணமாக பட்டணம் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி, அதே பகுதியைச் சோ்ந்த சக்தி முருகன், சபரிராஜன், அருள் ஆகியோா் காரில் சென்று, முனியசாமி, மோகன், ஸ்டாலின் ஆகியோரை வெட்டி விட்டு தப்பிச் சென்றனா். இதில், முனியசாமி, மோகன் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவா் என்றனா்.