முகப்பு
மதுரை

தலைமுறைகளைக் கடந்த குடும்ப நட்புக்காக பிரசாரம்!

Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:44 AM
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:43 AM

தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டு, தமிழர்களின் உரிமைகளுக்காக இயக்கம் நடத்தி வருபவர் தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் தலைவர் பழ. நெடுமாறன். காமராஜர், இந்திரா காந்தி, கருணாநிதி, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோருடன் நெருங்கிய அரசியல் தொடர்பு கொண்டிருந்தவர் பழ. நெடுமாறன் என்பது அனைவரும் அறிந்தது.

இவர் தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பயணித்து, பின்னர் அதிலிருந்து வெறியேறி காமராஜர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கடந்த 1980-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக கூட்டணியில் காமராஜர் காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பழ.நெடுமாறன். இந்தத் தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் நீதிக் கட்சியின் தலைவர் பி.டி.ராஜனின் மகனும், தற்போதைய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தந்தையுமான பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்.

1980 பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் வேட்புமனுவில் முன்மொழிந்து கையொப்பமிட்டவர் வேறு யாருமல்ல, பழ. நெடுமாறனின் தந்தை கி. பழனியப்பனார்தான். தனது மகனை எதிர்த்துப் போட்டியிட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் வேட்புமனுவை பழனியப்பனார் எப்படி முன்மொழிந்தார் என்ற ஆச்சரியம் எழுவது இயல்பு.

Advertisement

ஆனால், பி.டி. ராஜன், கி. பழனியப்பனார் குடும்பங்களைப் பற்றி நன்கு அறிந்த மதுரை மக்களுக்கு இது ஆச்சரியத்தை அளிக்காது. ஏனெனில், இந்த இரு குடும்பத்தினரும் பல தலைமுறைகளாக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இன்று வரை நட்பு பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், 45 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகனும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக மதுரை மத்திய தொகுதியில் பழ. நெடுமாறன் புதன்கிழமை பிரசாரம் செய்தார்.

முதுமையிலும் தனது குடும்ப நட்பு பாரம்பரியம் தொடர வேண்டும் என்பதற்காகவே பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து, பழ. நெடுமாறன் நேரடியாக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பழ. நெடுமாறன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-எம்.சங்கர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.