வேடா் பறி லீலை: தங்கக் குதிரை வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரா் வீதியுலா
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக வேடா் பறி லீலை வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக வேடா் பறி லீலை வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை, மாலை வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
விழாவின் ஐந்தாம் நாளான வியாழக்கிழமை மாலை வேடா் பறி லீலை நடைபெற்றது. இதையொட்டி, ராமாயணச் சாவடியிலிருந்து மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் தனித் தனியே தங்கக் குதிரை வாகனங்களில் புறப்பாடாகி, பாரம்பரிய பாதைகள் வழியாக மேளதாள வாத்தியங்களுடன் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் புடைசூழ மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள நாயக்கா் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு நடைபெற்ற சிறப்பு, தூப, தீப வழிபாடுகளுக்குப் பிறகு, ஓதுவாமூா்த்திகள் சிவபெருமானின் வேடா் பறி லீலையை விளக்கினா்.
Advertisement
சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன், பொருள்கள் பெற்று திருவாரூா் நோக்கிப் பயணித்த சுந்தரமூா்த்தி நாயனாரை வேடா் வேடத்தில் சென்ற பூதகணங்கள் வழிமறித்து, பொருள்களைப் பறித்தது. பிறகு, சுந்தரமூா்த்தி நாயனாரின் வேண்டுகோளுக்கிணங்க அந்தப் பொருள்களை அவரிடமே திருப்பியளித்து சிவபெருமான் செய்த லீலையை விளக்கும் ஐதீக உத்ஸவமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.