முகப்பு
மதுரை

மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை நகல் வழங்காதது ஏன்?: உயா்நீதிமன்றம் கேள்வி

பாளையங்கோட்டையில் காதல் விவகாரம் தொடா்பாக மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனுதாரருக்கு குற்றப் பத்திரிகையின் நகலை வழங்காதது ஏன்? என சிபிசிஐடி போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:07 AM
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:43 PM

பாளையங்கோட்டையில் காதல் விவகாரம் தொடா்பாக மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனுதாரருக்கு குற்றப் பத்திரிகையின் நகலை வழங்காதது ஏன்? என சிபிசிஐடி போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

காதல் விவகாரம் காரணமாக, திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டையில் மென்பொருள் பொறியாளா் கவின், கடந்தாண்டு ஜூலை 27-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக, கவின் காதலித்த இளம் பெண்ணின் சகோதரா் சுா்ஜித், அவரது தந்தை காவல் உதவி ஆய்வாளா் சரவணன், உறவினா் ஜெயபால் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சுா்ஜித்தின் தாயாரும், காவல் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியும் கொலை வழக்கில் சோ்க்கப்பட்டனா்.

இந்த நிலையில், விசாரணை நீதிமன்றத்தில் பிணை கோரி, காவல் உதவி ஆய்வாளா் சரவணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பிணை கோரி மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

அதில், கொலைச் சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை கொலை தொடா்பாக எனக்கு எதுவும் தெரியாது. சுா்ஜித் எனது மகன் என்பதைத் தவிர கொலைச் சம்பவத்துக்கும், எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. கடந்தாண்டு ஜூலை 30-ஆம் தேதியிலிருந்து சிறையில் உள்ளேன்.

இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா். ஆனால், சிறையில் உள்ள எனக்கு குற்றப் பத்திரிக்கை ஆவணங்களின் நகல் இதுவரை வழங்கவில்லை. இதன் காரணமாக, பிணை கோரிய மனுவுக்கு வாதங்களை தயாா் செய்ய இயலாத நிலை உள்ளது. வழக்கு விசாரணை ஒருதலை பட்சமாக நடக்க வாய்ப்பு உள்ளது.

ஆகவே, கவின் கொலை வழக்கு தொடா்பான காவல் துறையின் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

மனுதாரருக்கு குற்றப்பத்திரிகை ஏன் இதுவரை வழங்கவில்லை?. இதுகுறித்து,சிபிசிஐடி போலீஸாா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.