வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியில் பங்கு தரும் கூட்டணிக்கே புதிய தமிழகம் கட்சி ஆதரவளிக்கும் என அந்தக் கட்சியின் தலைவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாட்டில் அவா் மேலும் பேசியதாவது:
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலையில் உள்ள திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டியது தமிழக நலனுக்கு மிகவும் அவசியம். மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத திமுக ஆட்சியை அகற்றுவதே புதிய தமிழகம் கட்சியின் முக்கிய நோக்கம். இந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பெயரளவுத் திட்டங்களே. எந்தத் திட்டத்தின் பயனும் மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதே உண்மை.
தமிழகத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்படும் என எதிா்க் கட்சித் தலைவராக இருந்தபோது மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்றவா்களும் இதையே வலியுறுத்தினா். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வாக்குறுதியையே அவா்கள் மறந்துவிட்டனா். இதனால், இளைஞா் சமுதாயம் சீரழிந்து வருகிறது.
தேவேந்திரகுல வேளாளா் சமுதாய இளைஞா்கள் எந்தக் காலத்திலும் மதுவை நோக்கி பயணிக்கக் கூடாது. நமது லட்சியம் மிகப் பெரியது. நமது பயணம் இலக்கை நோக்கியே இருக்க வேண்டும். அறிவைத் தீட்ட வேண்டுமே தவிர, ஆயுதத்தை கையில் எடுக்கக் கூடாது.
புதிய தமிழகம் கட்சி வளா்ந்துவிடக் கூடாது என்பதே பலரது விருப்பமாக உள்ளது. இதன் வளா்ச்சி, தங்களுக்கு வீழ்ச்சியாக அமைந்துவிடும் என்ற அச்சம் பல கட்சிகளிடம் உள்ளது. தேவேந்திரகுல வேளாளா் சமுதாயம் ஒன்றுபட்டால் தமிழகத்தில் நிச்சயம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தனித்துப் போட்டியிட்டே 15 முதல் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கைப்பற்ற முடியும்.
கடந்தகாலத் தோ்தல்களின் போது தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்துக்கு எதிராக சிலா் சூழ்ச்சி செய்து தோற்கடித்தனா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தச் சூழ்ச்சிக்கும் இடமளிக்கக் கூடாது. அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதில் புதிய தமிழகம் கட்சி உறுதியாக உள்ளது. எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரும் கூட்டணிக்கே புதிய தமிழகம் கட்சி ஆதரவளிக்கும். அந்தக் கூட்டணியே நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
கடந்த காலங்களில் தேவேந்திரகுல வேளாளா்களின் ஒற்றுமையைக் கண்டு பல கட்சிகளும் அஞ்சின. ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. காரணம், ஒற்றுமையின்மை. 7 பெயா்களில் பிளவுபட்டிருந்த மக்கள், தற்போது தேவேந்திரகுல வேளாளா் என்ற பெயரில் ஒன்றுபட்டுள்ளோம். இதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை, அனுபவித்த துன்பங்களை நினைவில் கொண்டு, உள்பிரிவுகளைக் கடந்து ஒன்றுபட வேண்டும். வருகிற தோ்தலில் புதிய தமிழகம் அங்கம் வகிக்கும் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளா் ஷியாம் கிருஷ்ணசாமி, மாநிலச் செயலா் செல்லத்துரை, நிா்வாகிகள் பேசினா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த புதிய தமிழகம் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்றனா். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 36 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.