திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இரு விவசாயிகள் உயிரிழந்தனா்.
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பொருளூா் வெறுவாடிநாயக்கன் வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (62), தேவத்தூா் பில்லாகாட்டு வலசை சோ்ந்தவா் கருப்பசாமி (62). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் கள்ளிமந்தையம் அடுத்த வாகரை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கள்ளிமந்தையம் போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திண்டுக்கல் பாரதிபுரம் குறிஞ்சி நகரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் செந்தில்குமாரை கைது செய்தனா்.