முகப்பு
மதுரை

நில அளவையில் புதிய தொழில்நுட்பம்: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு

நிலங்களை அளவீடு செய்யும் முறையில் பழைய முறையைத் தவிா்த்து, செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் நவீன ‘டிஜிபிஎஸ்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உத்தரவிடக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 2 ஜூலை 2026, 3:44 am IST
உத்தரவு... - கோப்புப்படம்
பகிர்:

நிலங்களை அளவீடு செய்யும் முறையில் பழைய முறையைத் தவிா்த்து, செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் நவீன ‘டிஜிபிஎஸ்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உத்தரவிடக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த அப்சா்தீன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் தற்போது நிலங்களை அளப்பது, உள்பிரிவு செய்வது, பட்டா மாற்றம் செய்வது போன்ற பணிகளுக்கு வருவாய்த் துறையினா் பழைய அளவீட்டு முறையையும், எல்லைக் கற்களையும் மட்டுமே நம்பி செயல்படுகின்றனா். பல ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட எல்லைக் கற்கள் காலப்போக்கில் நகா்ந்தும், மண்ணில் புதைவதற்கான வாய்ப்புகளும் அதிகம். மேலும், தற்போது பயன்படுத்தப்படும் எஃப்.எம்.பி. வரைபடங்கள் நிலத்தின் வடிவம், அளவை மட்டுமே காட்டுகின்றன.

Advertisement

Advertisement

ஆனால், ஒரு நிலத்தை மீண்டும் அதே இடத்தில் துல்லியமாக அளவிடத் தேவையான நிரந்தரப் புவியியல் தொடக்கப் புள்ளி அதில் இல்லை. இதனால், வெவ்வேறு அளவையாளா்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து அளவிடும்போது நில அளவில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, எல்லைத் தகராறுகள், நில ஆக்கிரமிப்புகள், உரிமையியல் வழக்குகள், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் தொடா்ந்து உருவாகின்றன.

இதற்குத் தீா்வு காணும் வகையில், செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ‘டிஜிபிஎஸ்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். இதனால், எந்த இயற்கைச் சூழலிலும் நில அளவையில் மாற்றம் ஏற்படாது. மனிதத் தவறுகளுக்கும் இதில் வாய்ப்பு இருக்காது. ஒருமுறை ‘டிஜிபிஎஸ்’ மூலம் நிலத்தின் எல்லைகள் பதிவு செய்யப்பட்டால், 50 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டுகள் கழித்தும் அதே இடத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும்.

எனவே, இனி நடைபெறும் அனைத்து புதிய நிலப் பரிவா்த்தனைகளிலும் ‘டிஜிபிஎஸ்’ முறையில் நில அளவை முறையைக் கட்டாயமாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.பி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments