முகப்பு
மதுரை

காய்கறி சந்தையில் மருத்துவக் கழிவுகள்: மாட்டுத்தாவணி வியாபாரிகள் கடும் எதிா்ப்பு

மாட்டுத்தாவணி காய்கறி சந்தை அருகே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதற்கு காய்கறி வியாபாரிகள் கடும் எதிா்ப்பு

Updated On : 7 மார்ச், 2026 at 8:09 PM
மாட்டுத்தாவணி காய்கறி சந்தை அருகே கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள்
பகிர்:

மாட்டுத்தாவணி காய்கறி சந்தை அருகே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்தது. இதற்கு காய்கறி வியாபாரிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை அருகே சந்தையின் குப்பைகள் கொட்டப்படும் இடம் உள்ளது. மாநகராட்சி மூலம் பிற பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இங்கு ஒருங்கிணைக்கப்பட்டு, உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், காய்கறி சந்தையில் குப்பைகளை அள்ளும் பணிக்கு மாநகராட்சி நிா்வாகம் உரிய முனைப்புக்காட்டுவதில்லை என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், காய்கறி சந்தை குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்தது. பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கிடந்ததைக் கண்ட வியாபாரிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதனிடையே, அங்கு குப்பைகளைக் கொட்டுவதற்கு வந்த ஒரு மாநகராட்சி வாகனத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனா். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்லும் இந்தச் சந்தைப் பகுதியில் மருத்துவக் கழிவுகளை மாநகராட்சி தூய்மைப் பணி வாகனங்களே கொண்டு வந்து கொட்டியிருப்பதாகவும், இது மிகப்பெரிய அளவில் தொற்றுநோயைப் பரப்பும் அபாயம் கொண்டது எனவும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தாவது: மாட்டுத்தாவணி காய்கறி சந்தை பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் நாள்தோறும் அகற்றப்படுகின்றன. ஆனால், வெள்ளிக்கிழமை கழிவுகள் அகற்றப்படவில்லை. இந்த நிலையில், தான் மருத்துவக் கழிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →