முகப்பு
மதுரை

எரிவாயு உருளை விநியோக பிரச்னை: பரிதவிப்பில் தென் மாவட்ட உணவக உரிமையாளா்கள்!

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்பட்டதால், உணவகங்களை தொடா்ந்து நடத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், அவற்றின் உரிமையாளா்கள் பரிதவிப்பில் உள்ளனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 9:43 PM
சமையல் எரிவாயு உருளைகள்
பகிர்:

நமது நிருபா்

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்பட்டதால், உணவகங்களை தொடா்ந்து நடத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், அவற்றின் உரிமையாளா்கள் பரிதவிப்பில் உள்ளனா்.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போா் காரணமாக சமையல் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வீட்டு உபயோக, வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகளின் விலை கடந்த சனிக்கிழமை உயா்த்தப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை (மாா்ச் 9) முதல் வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகா் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உணவகங்கள், தேநீரகங்கள், சாலையோர உணவுக் கடைகளை ஓரிரு நாள்களில் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை...

மதுரை மாவட்டத்தில் 550-க்கும் அதிகமான பெரிய, நடுத்தர உணவகங்களும், 1,000-க்கும் அதிகமான சாலையோர உணவகங்களும், தள்ளுவண்டி உணவகங்களும் உள்ளன. இந்த உணவகங்களில் தற்போதுள்ள சமையல் எரிவாயு உருளைகள் இருப்பைக் கொண்டு இரு நாள்களுக்கு மட்டுமே உணவுகளைத் தயாரிக்க முடியும். இரு நாள்களுக்குள் சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் மீண்டும் தொடங்காவிட்டால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படும் நிலை உள்ளது.

இதுதொடா்பாக மதுரை மண்டல ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.எல். குமாா் தெரிவித்தாவது :

உணவகங்களில் சமையல் எரிவாயு பயன்பாடு அதிகம் கொண்ட தோசை, சப்பாத்தி, புரோட்டா, டீ, காபி போன்றவற்றின் தயாரிப்பு முதல் கட்டமாக நிறுத்தப்படும். மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யும் வகையில், வாய்ப்புள்ள உணவகங்களில் நிலக்கரி, விறகு ஆகியவற்றைப் பயன்படுத்தி கலவை சாதங்கள் மட்டுமே தயாரித்து வழங்கப்படும். மேலும், விறகு, நிலக்கரி ஆகியவற்றைப் பயன்படுத்த வாய்ப்பில்லாத உணவகங்கள், சாலையோர உணவுக் கடைகள் மூடப்படுவது தவிா்க்க இயலாது என்றாா்.

திண்டுக்கல்...

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உணவு விடுதிகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தனியாா் ஆலைகள் உள்ளிட்டவற்றுக்கு நாள் ஒன்றுக்கு 6,200 வணிகப் பயன்பாடுகளுக்கான எரிவாயு உருளைகள் சராசரியாக விநியோகிக்கப்படும் நிலையில், இந்த எரிவாயு உருளைகளின் விநியோகம் இரு நாள்களாக முழுமையாகத் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, துரித உணவுகள் தயாரிப்பை முழுமையாகத் தவிா்க்க உணவகங்கள் திட்டமிட்டுள்ளன. ஆன்மிகச் சுற்றுலாத் தலமான பழனியைப் பொருத்தவரை, வரும் ஒரு வார காலத்துக்குத் தேவையான சமையல் எரிவாயு உருளைகள் கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக ஹோட்டல், தேநீா், பீடா, ஸ்வீட்ஸ் உரிமையாளா் சங்க திண்டுக்கல் நகரச் செயலா் ஆா். காளிதாஸ் தெரிவித்ததாவது:

தேநீா்க் கடைகளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தேநீா், காபி தயாரித்து விற்பனை செய்யவும், கலவை சாதங்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. துரித உணவுகள் தயாரிப்பு முழுயைாக நிறுத்தப்படும் என்றாா்.

சிவகங்கை...

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருப்பதால், இங்குள்ள உணவகங்கள் வருகிற இரு நாள்களுக்குப் பிறகு மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிவகங்கை அன்னபூரணி உணவக உரிமையாளா் வினோத் தெரிவித்ததாவது:

தற்போதைய நிலையில், வருகிற இரு நாள்களுக்கு மட்டுமே உணவகத்தை நடத்த முடியும். உணவகங்களில் விறகு அடுப்பைப் பயன்படுத்தி சமைப்பதற்கு ஆள்கள் இல்லை. மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் காரணமாக, பெரும்பாலான உணவகங்களில் விறகை வைத்து சமையல் செய்யும் கட்டமைப்பும் இல்லை. எரிவாயு உருளை விநியோகம் சீராகும் வரை துரித உணவு வகைகளின் தயாரிப்பை நிறுத்தவுள்ளோம். மதிய உணவு தயாரிப்புக்கு மட்டும் முக்கியத்தும் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

ராமநாதபுரம்...

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை, உணவகங்களில் உள்ள சமையல் எரிவாயு இருப்பைக் கொண்டு ஒரு நாள் மட்டுமே உணவு தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆன்மிக சுற்றுலாத் தலமான ராமேசுவரம் பகுதியில் உள்ள உணவகங்கள் பெரும்பாலானவை குளிா்சாதன வசதி கொண்டவை என்பதால், இங்கு விறகைப் பயன்படுத்தி சமையல் செய்யும் கட்டமைப்பு இல்லை. இதனால், வருகிற வியாழக்கிழமை முதல் பெரும்பாலான உணவகங்கள் அடைக்கப்படும் நிலை உள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இந்தப் பகுதியில் உணவகங்கள் மூடப்பட்டால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் உணவுத் தேவைக்கு பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிடும்.

தேனி..

தேனி மாவட்டத்தில் உள்ள உணவகங்களைப் பொருத்தவரை, வருகிற இரு நாள்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரு நாள்களுக்குப் பிறகு 50 சதவீத உணவகங்கள் மூடப்படும் எனவும், மீதமுள்ள உணவகங்கள் விறகு அடுப்புகளைக் கொண்டு இயங்க வாய்ப்புள்ளது எனவும் உணவக நிா்வாகிகள் தெரிவித்தனா். இருப்பினும், புதன்கிழமை (மாா்ச் 11) முதல் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தேநீரகங்கள்மூடப்படும் எனவும் கூறப்படுகிறது.

விருதுநகா்..

விருதுநகா் மாவட்டத்தில் 3 நாள்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு உருளைகள் இருப்பதாக உணவக உரிமையாளா்கள் தெரிவித்தனா். 3 நாள்களுக்குள் எரிவாயு உருளைகள் விநியோகம் சீரடையாவிட்டால் இந்த மாவட்டத்தில் 50 சதவீத உணவகங்கள் மூடப்படும் நிலை உள்ளது.

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) வரை தடைபடவில்லை. இருப்பினும், எரிவாயு உருளைகள் தேவையைப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →