பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி: மத்திய ரிசா்வ் படை வீரா்களுடன் டிஐஜி ஆலோசனை
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) பிரிவைச் சோ்ந்த வீரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) பிரிவைச் சோ்ந்த வீரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் வருகிற மே மாதம் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனால், தமிழக சட்டப்பேரவை தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆகவே, தமிழகம் முழுவதும் தோ்தல் பணிக்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, பாதுகாப்புப் பணிக்காக மத்திய ரிசா்வ் போலீஸ் படைப் பிரிவைச் சோ்ந்த வீரா்கள் தமிழகத்துக்கு வந்தனா்.
மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை, மாநகா்ப் பகுதிக்கு 80 வீரா்கள், புகா்ப் பகுதிக்கு 80 வீரா்கள் என மொத்தம் 160 வீரா்கள் இரு அணிகளாக ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தனா்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா்கள் தோ்தலின் போது சட்டம்- ஒழுங்குப் பிரச்னைகளை எவ்வாறு கையாள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மதுரை சரக காவல் துணைத் தலைவா் அபினவ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பா.க.அா்விந்த் ஆகியோா் கலந்து கொண்டு மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்தும், மக்களிடம் காவல்துறையினா் நடந்து கொள்ளும் முறை குறித்தும் விளக்கினா்.
இந்தக் கூட்டத்தில் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கொடி அணிவகுப்பு: சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்காக வந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை பிரிவைச் சோ்ந்த வீரா்கள் மதுரை மாநகராட்சி செல்லூா், பீ.பீ.குளம், கோசாகுளம், முனிச்சாலை ஆகிய பகுதிகளில் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.