முகப்பு
மதுரை

தென் மாவட்டங்களில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: உயா்நீதிமன்றம் வேதனை

தென் மாவட்டங்களில் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை வேதனை தெரிவித்தது.

Updated On : 14 மார்ச், 2026 at 2:19 AM
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

தென் மாவட்டங்களில் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை வேதனை தெரிவித்தது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில், அவா் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டிலிருந்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றாா். வெகு நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சுப்புராஜ் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகாா் செய்தாா்.

போலீஸாா் மாணவியைத் தேடி வந்த நிலையில், புதன்கிழமை மாலையில் வேடநத்தம் காட்டுப் பகுதியில் முகம், உடலில் காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், மாணவியின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் மாணவியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் வழக்கம் போல வெள்ளிக்கிழமை முற்பகலில் வழக்குகளை விசாரித்தனா்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் மாரீஷ்குமாா் முன்னிலையாகி, விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என முறையீடு செய்தாா்.

அப்போது, இதை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் 2. 30 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். இதையடுத்து, மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் முன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில், வழக்கு தொடா்பாக விசாரணை செய்வதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதில் மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தென் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன. இருப்பினும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அதிக அழுத்தம் கொடுப்பது சரியான அணுகுமுறை அல்ல.

இந்த அழுத்தம் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யவோ, விசாரணையை சரியாக நடத்தவோ இயலாத நிலையை உருவாக்கும்.

அறிவியல்பூா்வமான முறையில் சான்றுகளை காவலா்கள் சேகரிக்க வேண்டும். காவல் துறையினா் இதுபோன்ற புகாா்களை மெத்தனமாகக் கையாளுவது ஏற்கத்தக்கதல்ல. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பான பதில் மனுவை தமிழக அரசு சிடி ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →