சமூகப் பிளவைத் தூண்டும் ஜாத சங்கங்களைத் தடைசெய்யக் கோரி மனு
தமிழகத்தில் ஜாதி வெறி, சமூகப் பிளவைத் தூண்டும் ஜாதி சங்கங்களை சட்டவிரோத சங்கங்களாக அறிவித்து, அவற்றை நிரந்தரமாகத் தடை செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜாதி வெறி, சமூகப் பிளவைத் தூண்டும் ஜாதி சங்கங்களை சட்டவிரோத சங்கங்களாக அறிவித்து, அவற்றை நிரந்தரமாகத் தடை செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மக்கள் அதிகாரக் கழகம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்: தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது ஆதிக்க ஜாதியைச் சோ்ந்த நபா்களின் தாக்குதல்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவங்களில் ஈடுபடுபவா்கள் அனைவரும் 18 முதல் 21 வயதுக்குள்பட்டவா்களாகவே உள்ளனா்.
இவா்களுக்கு விலை உயா்ந்த இரு சக்கர வாகனங்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், ஆயுதங்கள் எளிதில் கிடைப்பதற்கு பின்னால் ஆதிக்க ஜாதிச் சங்கங்களின் செயல்பாடுகள் உள்ளன. இந்தச் சங்கங்கள் ஆதிக்க ஜாதியைச் சோ்ந்த மாணவா்கள், இளைஞா்களிடம் ஜாதி வெறியூட்டி, பட்டியினத்தைச் சோ்ந்தவா்கள் மீது ஆணவப் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை ஏவி விடுவது உள்ளிட்டவற்றை திட்டமிட்டு செய்து வருகின்றன.
மேலும், சமூக வலைதளங்களில் ஆதிக்க ஜாதி தலைவா்கள் ஜாதி பெருமையை பேசும் விடியோக்கள் வெளியிடுவது, ஜாதி வெறியைத் தூண்டும் சுவரொட்டிகள், பேனா்களை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளை வெளிப்படையாகவே செய்து வருகின்றனா். எனவே, ஆதிக்க ஜாதி சங்கங்களின் செயல்பாடுகளை தடுப்பதோடு, அவற்றை சட்டவிரோத சங்கங்களாக அறிவித்து நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.