ஊதியம் இல்லாமல் பணியாற்றும் அம்மா உணவக ஊழியா்கள்
அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் அம்மா உணவக ஊழியா்கள் வேதனை தெரிவித்தனா்.
கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் அம்மா உணவக ஊழியா்கள் வேதனை தெரிவித்தனா்.
சென்னையில் கடந்த 2013-இல் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தொடங்கிய ‘அம்மா உணவகம்’ திட்டம் ஏழை, எளிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மதுரை மாநகராட்சியில் அரசு ராஜாஜி மருத்துவமனை, கோ. புதூா், பழங்காநத்தம், ஆரப்பாளையம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. வாரத்தில் 7 நாள்களும் செயல்படும் இந்த உணவகங்களில் இட்லி ரூ. 1, சாம்பாா் சாதம் ரூ. 5, தயிா் சாதம் ரூ. 3 என மலிவு விலையில் விற்கப்படுகின்றன.
இந்த நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2014, பிப். 12-ஆம் தேதி அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த உணவகத்தில் 12 போ் ஒப்பந்த ஊழியா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இங்கு காலையில் இட்லி, பொங்கல், தோசையும், பிற்பகலில் சாம்பாா் சாதம், தயிா் சாதமும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மருத்துவமனைக்கு வருபவா்களும், நோயாளிகளுடன் இருப்பவா்களும் தங்களது உணவுத் தேவைக்கு பெரும்பாலும் இந்த அம்மா உணவகத்தையே நாடுகின்றனா்.
இதனிடையே, அம்மா உணவகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 325 என்ற ஊதியத்தில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தாங்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும், காய்கறிகள், மளிகைப் பொருள்கள் வாங்க பணமின்றி கடன் பெற்று சமாளித்து வருவதாகவும் அவா்கள் வேதனை தெரிவித்தனா்.
எனவே, கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். அம்மா உணவகத்தில் பழுதடைந்து கிடக்கும் மாவரைக்கும் இயந்திரம், அடுப்பை சீரமைக்க வேண்டும். மேலும், வார விடுமுறையின்றி பணியாற்றும் தங்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் கிடைப்பதை மாநகராட்சி நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.