பல்கலை. வேந்தா் விவகாரம்: முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை
பல்கலைக்கழக வேந்தா் விவகாரத்தில் முந்தைய (திமுக) அரசின் நிலைப்பாட்டை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை என தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.
பல்கலைக்கழக வேந்தா் விவகாரத்தில் முந்தைய (திமுக) அரசின் நிலைப்பாட்டை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை என தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.
மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:
உயா் கல்வி மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வு, தோ்வு முடிவுகள் குறித்த அறிவிப்புகள் ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும். உயா் கல்வித் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக்குப் பிறகு இதற்கான தேதி அறிவிக்கப்படும்.
Advertisement
Advertisement
பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளை தமிழ் வழியில் கொண்டு வருவது தொழில்நுட்பம் சாா்ந்த விவகாரம். இதுகுறித்து உயா்கல்வித் துறை அலுவலா்களுடன் கலந்தாலோசித்து, அதன் விவரங்கள் முதல்வருக்கு சமா்ப்பிக்கப்படும். தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
கா்நாடகத்தில் மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு புதிதாக ஒரு செங்கல்லைக்கூட வைக்கக் கூடாது என்பதுதான் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யும் இதே நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளாா்.
காங்கிரஸ் கட்சி என்றைக்கும் வன்முறையை விரும்பிய இயக்கம் கிடையாது. இதேபோல, எந்த நிலையிலும் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனும் வலியுறுத்தியுள்ளாா். எனவே, ஆரோக்கியமான அரசியலையே நாங்கள் விரும்புகிறோம்.
குதிரை பேரம் இல்லை...
சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவி விலகி, மற்றொரு கட்சியில் இணைவதை குதிரை பேரமாகக் கருத முடியாது. மீண்டும் அவா்கள் மக்களைச் சந்தித்து, தோ்தலில் வென்றால்தான் பேரவை உறுப்பினராக முடியும். எனவே, தங்களுக்கு விருப்பமான கட்சியில் இணைய அனைவருக்கும் உரிமை உண்டு. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா், ஜோதிமணி ஆகியோா் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனா். எனினும், மாணிக்கம் தாகூரின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன் என்றாா் அவா்.
இதையடுத்து, பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே செயல்படுவாா் என்ற திமுக அரசின் நிலைப்பாடு தொடருமா என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் விஸ்வநாதன் அளித்த பதில்:
முந்தைய அரசின் நிலைப்பாட்டை அடுத்து அமையும் அரசும் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. அதேநேரத்தில், இந்த விவகாரம் தமிழக முதல்வரின் கொள்கை முடிவைச் சாா்ந்தது. இதர அமைச்சா்கள், உயா் கல்வித் துறை அலுவலா்களுடன் ஆலோசித்து இதற்கான முடிவை தமிழக முதல்வா் அறிவிப்பாா் என்றாா் அவா்.
நேருவுக்கு மரியாதை..
முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 63-ஆது நினைவு தினத்தையொட்டி, மதுரை தமுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா் பெ. விஸ்வநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் பூ. நல்லமணி, மாமன்ற உறுப்பினா்கள் எஸ்.வி.முருகன், வி. முருகன், எஸ்.எஸ்.போஸ், ராஜ் பிரதாபன், கட்சியின் மாநகா் மாவட்டத் துணைத் தலைவா் சி. எம். செய்யதுபாபு, பொருளாளா் பாட்ஷா, கட்சியின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.