காட்டு மரங்களை வெட்டி கடலில் போடும் மீனவர்கள்!
ராமநாதபுரம் அருகேயுள்ள பல்வேறு கடற்கரை கிராமங்களில் கணவாய் மீன்களை தூண்டிலில் பிடிப்பதற்காக காட்டு மரங்களை பெரிது, பெரிதாக வெட்டி அதை நடுக்கடலில் மீனவர்கள் போட்டு வைப்பதால், விசைப்படகு மீனவர்களின் மீன் பிடி வலைகள் சேதமடைந்து, மீன்பிடித் தொழிலே பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகேயுள்ள பல்வேறு கடற்கரை கிராமங்களில் கணவாய் மீன்களை தூண்டிலில் பிடிப்பதற்காக காட்டு மரங்களை பெரிது, பெரிதாக வெட்டி அதை நடுக்கடலில் மீனவர்கள் போட்டு வைப்பதால், விசைப்படகு மீனவர்களின் மீன் பிடி வலைகள் சேதமடைந்து, மீன்பிடித் தொழிலே பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படைத் தாக்குதல்கள், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீன்பிடித் தொழிலே அழிந்துவிடும் அபாயநிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் அருகேயுள்ள உச்சிப்புளி, தர்காவலசை, ஆற்றங்கரை, பழனிவலசை, இரணியன்வலசை, முடிவீரன்பட்டினம், சோகையன்தோப்பு, கிருஷ்ணாபுரம், சத்திரம், பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடல் பகுதியில் காட்டு மரங்களை பெரிது, பெரிதாக வெட்டி, படகுகளில் எடுத்துச் சென்று மீனவர்கள் கடலுக்குள் போட்டுவிட்டு வந்து விடுகின்றனர்.
காட்டு மரங்கள் போடப்பட்டுள்ள இடத்தில் கணவாய் மீன்கள் கூட்டம், கூட்டமாக வந்து தங்குவதைப் பயன்படுத்தி மரங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் தூண்டில் போட்டு அம் மீன்களை மீனவர்கள் பிடிக்கின்றனர். எஞ்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகிலோ அல்லது நாட்டுப் படகிலோ தூண்டிலுடன் சென்று அம் மீன்களைப் பிடிப்பதால், அவர்களுக்கு குறைந்த அளவு டீசல் செலவும், தூண்டில் செலவும் தவிர வேறு செலவுகள் எதுவும் ஏற்படுவது இல்லை. ஒரு தூண்டில் வாங்குவதற்கு ரூ.2 மட்டுமே செலவாகும். ஆனால். ஒரு கணவாய் மீன் தூண்டிலில் சிக்கிக் கொண்டால் அதை ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையும் விற்பனை செய்யலாம்.
Advertisement
அதே நேரத்தில் விசைப்படகில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் விலை உயர்ந்ததும், தரமானதுமான மீன் பிடி வலைகளை கடலுக்குள் வீசும்போது அவை மரங்களுக்கு இடையில் சிக்கி சேதமாகி விடுகின்றன. ஒரு வலையின் மதிப்பு ரூ.5 லட்சம் வரை இருக்கும் நிலையில், வலைகள் சேதமாகி விட்டால் தொடர்ந்து மீன் பிடிக்க முடியாமலும் கரைக்கு திரும்பிவிடும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஏராளமான மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மீனவர்களும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அழகன்குளம் மீனவர் சங்கத் தலைவர் பஞ்சவர்ணம் கூறியது: தூண்டில்கள் மூலம் கணவாய் மீன்களைப் பிடிப்பவர்கள் அடர்ந்த காட்டு மரங்களை வெட்டி கடலுக்குள் போடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாகத்தான் மரங்களைப் வெட்டிப் போடுவது தொடர்கிறது. அதற்கு முன்பு இதுபோன்று போட்டதில்லை. ஒரு வலையின் மதிப்பு ரூ. 5 லட்சம். வலைகள் சேதமடைந்து விட்டால், அதைச் சரிசெய்யவே ஒரு வாரமாகி விடுகிறது. இதனால் தொழில் பாதிக்கப்படுகிறது. ஏராளமான மீனவர்களைப் பாதிப்புக்கு உண்டாக்கும் இவ் விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடித் தொழிலைச் செய்ய முடியும் என்றார்.
இதுகுறித்து கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் குமாரவேல் கூறியதாவது:
கணவாய் மீன்கள் மரங்கள் அடர்த்தியாகவுள்ள பகுதிகளில் தான் குஞ்சு பொரித்து இனப் பெருக்கம் செய்யும். கடலில் ரோந்து போகும்போது மரங்கள் இருப்பது தெரிந்தால், அதை உடனடியாக வெளியில் எடுத்து கரைக்கு கொண்டுவந்து போட்டு விடுவோம். விரைவில் மீன்வளத் துறை அதிகாரிகளையும் இணைத்துக் கொண்டு கூட்டாக ரோந்து சென்று கடலுக்குள் மரங்களைப் போடுபவர்களைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்றார்.