முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நிலக்கடலை சாகுபடிக்கு விதைப்பண்ணைகள் அமைப்பு: அதிகாரி தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியை தாங்கி வளரும் நிலக்கடலை சாகுபடி செய்வதற்காக முதல் முறையாக விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியை தாங்கி வளரும் நிலக்கடலை சாகுபடி செய்வதற்காக முதல் முறையாக விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது என விதைச்சான்று உதவி இயக்குநர் எஸ்.எஸ்.ஷேக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே முடுக்குத்தரவை கிராமத்தில் பாலு என்ற விவசாயி வயலில் தரணி ரக நிலக்கடலை சாகுபடி செய்வதற்கான விதைப்பண்ணைகளை வியாழக்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் கூறியது:  ஹைதராபாத்தில் இயங்கும் மானாவாரி பயிர்களுக்கான சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட தரணி என்ற நிலக்கடலை ரகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதக்குடி, முஷ்டக்குறிச்சி, வல்லந்தை, அரசரடி வண்டல், முடுக்குத்தரவை, தினைக்குளம், கீரிப்பூர் வலசை ஆகிய கிராமங்களில் முதல் முறையாக விதைப்பண்ணைகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரக நிலக்கடலை வறட்சியை தாங்கி 110 நாள்களில் அதிக மகசூல் தரக்கூடியது.
 தேசிய எண்ணெய் வித்துப்பயிர்கள் மற்றும் எண்ணெய் பனை இயக்கம் திட்டத்தின் கீழ் உற்பத்தி மானியமாக கிலோவிற்கு ரூ.10-ம், விநியோக மானியமாக கிலோவுக்கு ரூ.25 மற்றும் விதை கிராம திட்டத்தின் கீழ் விநியோக மானியமாக 50 சதவிகிதத்திலும் வேளாண்மைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலக்கடலையில் 51 ஹெக்டேர் பரப்பளவில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு 50 மெ.டன் சான்று பெற்ற நிலக்கடலை கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.விதைப் பண்ணைக்குத் தேவையான ஆதார விதைகள் கொள்முதல் செய்யும் பணிகள் வேளாண்மைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் பொதுவாக திண்டிவனம் 7 ரக நிலக்கடலை அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் அதிக எண்ணெய் சதவிகிதம் கொண்ட திண்டிவனம் 13, காதிரி 6,  தரணி போன்ற புதிய ரகங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விவசாயிகளுக்கு தேவையான சான்று விதைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலக்கடலையில் பொக்குகள் இன்றி நன்கு வளர்ச்சியடைந்த முழுமையான பருப்புகளை பெறுவதற்கு நிலக்கடலை பயிரில் ஊட்டச்சத்து கலவையை தெளிப்பது அவசியம் என்றார். அப்போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ப.ராஜா, திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அழகேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →