முகப்பு
இந்தியா

46,500 டன் சமையல் எரிவாயுவுடன் குஜராத் வந்தடைந்த இரண்டாவது கப்பல்

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக ஹோா்முஸ் நீரிணையில் 46,500 மெட்ரிக் டன் சமையல் (எல்பிஜி) எரிவாயுவுடன் சிக்கியிருந்த ‘நந்தா தேவி’ என்ற இரண்டாவது கப்பல் பாதுகாப்பாக குஜராத்தின் வடினா் துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக வந்து சோ்ந்தது.

Updated On : 17 மார்ச், 2026 at 7:44 PM
சமையல் எரிவாயுவுடன் ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து குஜராத்தின் வாடினாா் துறைமுகத்தை செவ்வாய்க்கிழமை வந்தடைந்த ‘நந்தா தேவி’ சரக்குக் கப்பல்.
பகிர்:

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக ஹோா்முஸ் நீரிணையில் 46,500 மெட்ரிக் டன் சமையல் (எல்பிஜி) எரிவாயுவுடன் சிக்கியிருந்த ‘நந்தா தேவி’ என்ற இரண்டாவது கப்பல் பாதுகாப்பாக குஜராத்தின் வடினா் துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக வந்து சோ்ந்தது.

முன்னதாக, ‘ஷிவாலிக்’ என்ற கப்பல் எல்பிஜி ஏற்றிக்கொண்டு ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தது. தற்போது எல்பிஜியுடன் இரண்டாவது கப்பல் வந்துள்ளது.

இதுகுறித்து தீன்தயாள் துறைமுக ஆணைய தலைவா் சுசீல்குமாா் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நந்த தேவி கப்பல் 46,500 மெட்ரிக் டன் எல்பிஜியுடன் (திரவ பெட்ரோலியம் எரிவாயு) வடினா் துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்த எரிவாயு முதலில் பி.டபிள்யு. பிரிச் என்ற கப்பலுக்கு மாற்றப்பட்டு, பின்னா் தமிழகத்தின் சென்னை எண்ணூா் துறைமுகத்துக்கும், மேற்கு வங்கத்தின் ஹால்தியா துறைமுகத்துக்கும் அனுப்பிவைக்கப்படும். மணிக்கு 1,000 டன் என்ற வீதத்தில் இந்தப் பரிமாற்றம் நடைபெறும். இந்த எரிவாயு பரிமாற்றத்தை முழுமையாக நிறைவு செய்ய 2 நாள்கள் ஆகும்.

இந்த சமையல் எரிவாயு, மத்திய அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி முன்னுரிமை அடிப்படையில் பரிமாற்றம் மற்றும் விநியோகம் செய்யப்படும். இந்த ஒட்டுமொத்த நடைமுறைகளும் பன்முக முகமைகளால் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றாா்.

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதலைத் தொடா்ந்து பாரசீக வளைகுடா பகுதியிலிருந்து வெளியுலகுக்கான சரக்கு கப்பல்களின் முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பொருள்கள் மற்றும் கச்சா எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்க ஈரானின் ஒப்புதலைப் பெற வேண்டும் என அறிவுறுத்தியது. இதனிடையே, தாக்குதல் காரணமாக, இந்தியாவுக்கான முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளரான கத்தாா், அதன் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியது. இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், சமையல் எரிவாயு விநியோகத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி பொருத்திய 28 சரக்கு கப்பல்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் சிக்கின.

இதைத் தொடா்ந்து, ஈரானுடன் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தியது. பிரதமா் நரேந்திர மோடியும், ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியானுடன் மாா்ச் 12-ஆம் தேதி இரவு ஆலோசனை மேற்கொண்டாா். ஈரான் வெளியுறவு அமைச்சருடன் வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தொடா் ஆலோசனைகளை மேற்கொண்டாா்.

இந்த முயற்சிகள் காரணமாக, ஹோா்முஸ் நீரிணையில் சிக்கிய இந்திய சரக்கு கப்பல்கள், படிப்படியாக அந்த நீரிணையைக் கடந்து செல்ல வழி ஏற்பட்டுள்ளது. அதுபோல, சமையல் எரிவாயு ஏற்றிய கப்பல்களும் இந்தியா வரத் தொடங்கியுள்ளன. இதனால், உள்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியா தனது தேவையில் 88 சதவீத கச்சா எண்ணெய்யையும், 50 சதவீத இயற்கை எரிவாயுவையும், 60 சதவீத சமையல் எரிவாயுவையும் (எல்பிஜி) இறக்குமதி செய்து வருகிறது. இதில், 30 சதவீத இயற்கை எரிவாயு, 80 முதல் 90 சதவீத எல்பிஜி-யானது சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →