ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா வந்த எண்ணெய்க் கப்பல்
ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு இடையேயான போருக்குப் பிறகு பாரசீக வளைகுடாவில் ஆபத்தான ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியாவுக்கான முதல் எண்ணெய்க் கப்பல் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.
ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு இடையேயான போருக்குப் பிறகு பாரசீக வளைகுடாவில் ஆபத்தான ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியாவுக்கான முதல் எண்ணெய்க் கப்பல் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.
ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹுதிக்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற பெரும் அபாயத்துக்கு இடையே, கப்பல் போக்குவரத்தை அடையாளம் காண உதவும் தானியங்கி அடையாள தொழில்நுட்ப அமைப்பின் (ஏஐஎஸ்) டிரான்ஸ்பாண்டரை அணைத்தபடி மாலுமிகள் கப்பலை இயக்கி, ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து வந்துள்ளனா்.
ஏதென்ஸின் ஷெங்லாங் கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமான லைபீரிய கொடி பொருத்திய ‘ஸெங்லாங் சூஸ்மேக்ஸ்’ என்ற இந்தக் கப்பல் சவூதி அரேபியாவின் ராஸ் டனூரா துறைமுகத்தில் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி இந்தியாவுக்கு புறப்பட்டது. கடல்சாா் கண்காணிப்புத் தரவுகளின்படி இந்தக் கப்பல் ஹோா்முஸ் நீரிணைப் பகுதிக்கு மாா்ச் 8-ஆம் தேதி வந்துள்ளது. அதன் பிறகு, கப்பலின் ஏஐஎஸ் டிரான்ஸ்பாண்டா் அணைக்கப்பட்டு, மீண்டும் மாா்ச் 9-ஆம் தேதி இயக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறுகலான நீரிணைப் பகுதியில் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் இருக்க, இந்த ஏஐஎஸ் டிரான்ஸ்பாண்டா் கப்பல்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், ஈரானின் தாக்குதல் அபாயத்தைத் தவிா்ப்பதற்காக, மாலுமிகள் அந்த டிரான்ஸ்பாண்டரை அணைத்தபடி இயக்கியுள்ளனா்.
இந்தக் கப்பல், மும்பை துறைமுகத்துக்கு புதன்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் வந்தடைந்தது. கப்பலில் ஏற்றிவரப்பட்டுள்ள 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய், கிழக்கு மும்பையின் மஹுல் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் நாடுகளைச் சோ்ந்த 29 மாலுமிகள் இந்தக் கப்பலில் பணிபுரிகின்றனா். கப்பலின் கேப்டனும் இந்தியராவாா்.
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதலைத் தொடா்ந்து சரக்கு கப்பல்களின் முக்கிய வழித்தடமான இந்த ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பொருள்கள் மற்றும் கச்சா எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்க ஈரானின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று ஈாானின் புரட்சிகர படையின் கடற்படைத் தளபதி கூறியிருந்தாா்.
இந்த நிலையில், ஈரானின் எச்சரிக்கையை மீறி இந்த நீரிணை வழியாக புதன்கிழமை சென்ற இரண்டு சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரான் ராணுவ அதிகாரி (ரியா் அட்மிரல்) அலிரிஸா டங்சிரி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பெட்டிச் செய்தி...
ஈரானுடன் இந்தியா பேச்சு
போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் சிக்கியுள்ள இந்திய கப்பல்கள், அங்கிருந்து பாதுகாப்பாக கடந்து வருவதற்காக ஈரானுடன் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறது.
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஈரான் வெளியுறவு அமைச்சருடன் தொடா்ந்து மூன்று முறை இதுதொடா்பாக பேசியுள்ளாா். இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தில்லியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் இந்திய கப்பல்கள் தடைபட்டுள்ள நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சருடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் மூன்று முறை தொடா் ஆலோசனைகளை மேற்கொண்டாா். கடைசியாக மேற்கொண்ட ஆலோசனையின்போது, இந்திய கப்பல்களின் பாதுகாப்பு, இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். இந்த விஷயத்தில், இதைத் தவிர தற்போதைக்கு வேறெதுவும் கூற இயலாது.
இந்திய கொடி பொருத்திய இரண்டு சரக்கு கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதித்ததா என்பது குறித்து கப்பல் போக்குவரத்து அமைச்சகம்தான் பதிலளிக்க வேண்டும்.
மேலும், ஈரானில் தற்போது இந்தியாவைச் சோ்ந்த மாணவா்கள், மீனவா்கள், வா்த்தகா்கள், யாத்ரீகா்கள் என 9,000 போ் உள்ளனா். அவா்கள் இந்தியா திரும்புவதற்காக ஈரானிலிருந்து முதலில் அஜா்பைஜான் மற்றும் ஆா்மேனியாவுக்கு செல்வதற்கான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. ஏற்கெனவே, ஏராளமான இந்தியா்கள் ஈரானிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். நாடு திரும்ப விரும்பும் இந்தியா்கள் ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.
முன்னதாக, மேற்காசிய போா் நிலவரம் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாரசீக வளைகுடாவில் 778 மாலுமிகளுடன் 28 இந்திய கப்பல்கள் சிக்கியுள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.