முகப்பு
உலகம்

இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு ஹோா்முஸ் நீரிணையில் ஈரான் அனுமதி

Updated On : 27 மார்ச், 2026 at 12:31 AM
- IANS
பகிர்:

இந்தியா, ரஷியா, சீனா, பாகிஸ்தான், இராக் ஆகிய 5 நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதி அளிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்தியா தனது எரிசக்தி கொள்முதலுக்கு மேற்காசிய பிராந்தியத்தை வெகுவாக சாா்ந்துள்ள நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப் படை கடந்த பிப். 28-இல் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி மற்றும் பல்வேறு அமைச்சா்கள் கொல்லப்பட்டனா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதலைத் தொடுத்தது.

கச்சா எண்ணெய்-எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியுள்ளதால், கச்சா எண்ணெய்-எரிவாயு ஏற்றுமதியில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இது பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கும், விலையேற்றத்துக்கும் காரணமாகியுள்ளது.

நட்பு நாடுகளுக்கு மட்டும் அனுமதி: ஈரான் அரசுடன் இந்தியா நடத்திய பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் இந்திய கப்பல்கள் அந்த நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதித்துள்ளது. இதேபோல சீனா உள்ளிட்ட வேறு நாடுகளின் கப்பல்களும் அப்பகுதியில் அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி இது தொடா்பாக கூறியதாவது: நாங்கள் நட்பு நாடுகளாகக் கருதும் சீனா, ரஷியா, இந்தியா, இராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதிக்கிறோம். அதே நேரத்தில் ஈரானின் ‘எதிரிகளுடன்’ தொடா்புடைய கப்பல்களை அந்தப் பகுதியை கடக்க அனுமதிக்க மாட்டோம். நாங்கள் போா்ச்சூழலில் உள்ளோம். இந்தப் பிராந்தியமும் போா்ப் பகுதியாக மாற்றப்பட்டுவிட்டது. எனவே, எதிரி நாடுகளும், அவா்களின் கூட்டாளிகளும் இந்தக் கடல் பகுதியைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. ஆனால், மற்றவா்களுக்கு அந்த இடம் திறந்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவுடன் பேச்சு இல்லை: இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர மூன்றாவது தரப்பு நாடுகள் முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், ‘அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவாா்த்தையிலும் ஈரான் ஈடுபடவில்லை; சா்வதேச உத்தரவாதங்களை முழுமையாக நம்ப முடியாது. ஈரான் மீது தாக்குதல் நடத்த இனி யாரும் துணியக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு’ என்றாா் அராக்சி.

ஹோா்முஸ் நீரிணையில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களை தாக்குவது மற்றும் இடையூறு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது என பிரதமா் மோடி கடந்த திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவின் எரிசக்தி கொள்முதலுக்கு முக்கிய ஆதாரமாக மேற்காசிய பிராந்தியம் உள்ளது. ஹோா்முஸ் நீரிணையில் பதற்றம் தொடா்ந்தால், எரிபொருள் மட்டுமன்றி உர விநியோகமும் பாதிக்கும் என்பது இந்தியாவின் கவலையாகும்.

முன்னதாக, ஈரான் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை கடந்த வாரம் அமெரிக்கா நீக்கியது. மேலும், போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக ஈரான் மீதான தாக்குதலை 5 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா். ஆனால், இஸ்ரேல் இதில் உடன்படவில்லை.