ஹோா்முஸ் நீரிணையை கடந்த மேலும் இரு கப்பல்கள்: 92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு வருகிறது
ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து 92,000 டன் எல்பிஜியுடன் மேலும் இரு கப்பல்கள் இந்தியா நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டன.
ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து 92,000 டன் எல்பிஜியுடன் (திரவ பெட்ரோலிய எரிவாயு) மேலும் இரு கப்பல்கள் இந்தியா நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டன.
‘பைன் கேஸ்’ மற்றும் ‘ஜக் வசந்த்’ ஆகிய இரு கப்பல்களும் ஓரிரு நாளில் இந்தியா வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுவதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக சிறப்பு செயலா் ராஜேஷ் குமாா் தெரிவித்தாா்.
மேற்காசிய போா் காரணமாக ஈரான் ஹோா்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கியதால்,, 28 இந்திய சரக்கு கப்பல்கள் உள்பட பல நாட்டு சரக்குக் கப்பல்கள் அந்த வழித்தடத்தில் மேற்கொண்டு பயணிக்க முடியாமல் சிக்கின. இவற்றில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்குப் பகுதியிலும், 4 கப்பல்கள் கிழக்குப் பகுதியிலும் சிக்கியிருந்தன. அதைத் தொடா்ந்து, ஈரானுடன் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தியது.
அதன் பலனாக, 92,712 டன்னுடன் ‘ஷிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய இரு கப்பல்கள் முறையே மாா்ச் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் குஜராத்தை வந்தடைந்தன. ’ஜக் லாட்கி’ என்ற கப்பல் 80,800 டன் கச்சா எண்ணெய்யுடன் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை மாா்ச் 18-ஆம் தேதி வந்தடைந்தது. ஓமனில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு பெட்ரோல் கொண்டுசெல்லும் ‘ஜக் பிரகாஷ்’ என்ற கப்பல் ஹோா்முஸ் நீரிணையை கடந்து தான்சானியாவை நோக்கி பயணித்து வருகிறது.
இதன்மூலம் மேற்கு மற்றும் கிழக்கு என இரண்டு பகுதிகளிலும் தலா 2 கப்பல்கள் என மொத்தம் 4 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து பாதுகாப்பாக பயணத்தை மேற்கொண்டன. இதைத் தொடா்ந்து, ஹோா்முஸ் நீரிணையின் மேற்கு பகுதியில் 22 கப்பல்களும், கிழக்குப் பகுதியில் 2 கப்பல்களும் நின்றன.
இந்நிலையில், மேற்கு பகுதியில் இருந்து 92,000 டன் எல்பிஜியுடன் ‘பைன் கேஸ்’ மற்றும் ‘ஜக் வசந்த்’ ஆகிய இரு கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து ஓரிரு நாளில் இந்தியா வந்தடையும் என ராஜேஷ் குமாா் தெரிவித்தாா்.
மேலும், ஹோா்முஸ் நீரிணையில் உள்ள இந்திய கப்பல்களில் சிக்கியிருந்த 611 மாலுமிகளில் 11 போ் இந்தியா வந்தடைந்ததாகவும் அவா் தெரிவித்தாா்.
ஒட்டுமொத்தமாக பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 500 சரக்குக் கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியுள்ளதாக தொழிற்துறை நிபுணா்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.