கண்டிலான் கிராமத்தில் மழை வேண்டி அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு விழா
முதுகுளத்தூர் அருகே உள்ள கண்டிலான் கிராமத்தில் மழை வேண்டி அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு, பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூர் அருகே உள்ள கண்டிலான் கிராமத்தில் மழை வேண்டி அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு, பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு முன்னாள் ஊராட்சித் தலைவர் எஸ்.மலைக்கண்ணன் தலைமை வகித்தார். கடலாடி காவல் ஆய்வாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக கிராமத்தினர் கடந்த ஒரு மாதமாக விரதமிருந்து பேரையூர் கிராமத்தில் மண் புடி எடுத்து, அதன்மூலம் செய்யப்பட்ட குழந்தைகள், குதிரை உருவம் கொண்ட பொம்மைகளை தலையில் சுமந்து கோயிலை அடைந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர், கிராம மக்கள் அய்யனார் கோயிலுக்கு முன் பொங்கல் வைத்து, படையலிட்டனர். மாலையில் திருவிளக்கு பூஜை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இத்திருவிழா குறித்து, கண்டிலான் கிராமத்தைச் சேர்ந்த லிங்கம் கூறியதாவது:
ஆண்டுதோறும் எங்களது கிராமத்தில் புரவி எடுப்பு விழா நடைபெறும். வறட்சி நீங்கி, நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து சமுதாய மக்களும் இணைந்து சகோதரத்துவத்துடன் இவ்விழாவை கொண்டாடி வருகிறோம் என்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கண்டிலான் கிராமத்தினர் செய்திருந்தனர்.