ராமேசுவரத்தில் இளைஞர் சாவில் மர்மம்: உறவினர்கள் சாலை மறியல்
ராமேசுவரத்தில் இளைஞர் சாவில் மர்மம் இருப்பதாகவும், விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறி, அவரது உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமேசுவரத்தில் இளைஞர் சாவில் மர்மம் இருப்பதாகவும், விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறி, அவரது உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்துள்ள நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் பாலமுருகன் (28). ராமேசுவரம் புதுரோடு பகுதியில் குடியிருந்து வந்த பாலமுருகன், வாகன ஓட்டுநராக இருந்துள்ளார். ஞாயிற்றுகிழமை நள்ளிரவு வீட்டுக்கு வந்த பாலமுருகன், மாடியில் தூங்கச் சென்றுள்ளார். திங்கள்கிழமை காலையில் வீட்டின் முன்பகுதியில் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்த தனுஷ்கோடி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அவரது சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து, பாலமுருகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி, அவரது உறவினர்கள் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் நிலைய ஆய்வாளர் திலகராணி வரதராஜ் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்ததை அடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சடலத்தைப் பெற்றுச் சென்றனர்.