முகப்பு
ராமநாதபுரம்

வைகை ஆற்றை பாதுகாக்க மக்கள் அறவழியில் போராட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

வைகை ஆற்றைப் பாதுகாக்க மக்கள் அறவழியில் போராட்டம் நடத்த முன்வரவேண்டும் என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:01 AM
பகிர்:

வைகை ஆற்றைப் பாதுகாக்க மக்கள் அறவழியில் போராட்டம் நடத்த முன்வரவேண்டும் என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
பாமக சார்பில், பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பு முருகன் கோயில் முன்பாக, வைகையை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் கே. தங்கராஜ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலர் வடிவேல் ராவணன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பின்னர், அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் வைகை 4 ஆவது பெரிய ஆறு. தற்போது, ஆற்றுப்படுகை என்பதற்கான சுவடுகளே தெரியாமல் போய்விட்டது.
கேரளம், தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. வைகை ஆறு 1400 கண்மாய்களை நிரப்பி, 54 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வந்துள்ளது. கண்மாய்களில் தேக்கப்படும் பாசனநீர் 3 ஆண்டுகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 
காமராஜர் ஆட்சிக் காலத்தில் வைகை அணை கட்டுவதற்கு ராமநாதபுரம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, வைகை அணையின் தண்ணீர் 12 பங்குகளாக பிரிக்கப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 7 பாகம், சிவகங்கை மாவட்டத்துக்கு 3 பாகம், மதுரைக்கு 2 பாகம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. 
தற்போது, வைகையில் தண்ணீர் இல்லாமைக்கு மேகமலையில் 1.55 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, தடுப்பணைகள் கட்டி தோட்டங்கள் ஏற்படுத்தி 23 கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், வைகைக்கு வரும் தண்ணீர் தடுக்கப்பட்டுள்ளது. 111 அடி உயரமுள்ள வைகை அணையில் 71 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஆனால், முறையாக தூர்வாரப்படாததால் 21 அடி உயரத்துக்கு சகதி சேர்ந்துள்ளது. இதனால், அணையின் கொள்ளளவு குறைந்து விட்டது. மதுரையில் வரும் வைகை ஆற்றில் மருத்துவமனைக் கழிவுகளும், ஆலைக் கழிவுகளும் விடப்படுகின்றன. இதனால், வைகை விரைவில் சென்னை கூவம்போல் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்றி வைகையை பாதுகாக்க மக்கள் அறவழியில் போராட முன்வரவேண்டும்.
தமிழகத்தை மாறிமாறி ஆளும் திராவிடக் கட்சிகள் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே திட்டங்களை தீட்டுகின்றன. 50 ஆண்டுகள் தமிழக மக்களை ஏமாளிகளாக மாற்றிவிட்டனர். 
ஒருமுறை வாய்ப்புத் தாருங்கள் வறட்சியை போக்கி, ராமநாதபுரத்தை பசுமையான மாவட்டமாக மாற்ற முடியும்.  வைகையை பாதுகாக்கும் திட்டங்களும் அதற்கான தீர்வும் எங்களிடம் உள்ளன. அதை நிறைவேற்ற அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். விரைவில் அதனை நிறைவேற்றும் அரசாக நாங்களாகவே செயல்படுத்தும் காலம் வந்துவிட்டது. அதற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.