ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பு
இலங்கைக் கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.
இலங்கைக் கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 480-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று கடலுக்குச் சென்றனர். நள்ளிரவில் கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் 7 படகுகளில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். மேலும், 25-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலில் வீசி எறிந்தனர்.
இதனால் அச்சமடைந்த மற்ற மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரிடமிருந்து தப்பித்து செவ்வாய்க்கிழமை கரை திரும்பினர்.
படகு ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக, மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, மத்திய-மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.