இன்று கூடுகிறது காவிரி ஆணையம்: திட்டமிடப்பட்ட தேதிக்கு பதிலாக முன்கூட்டியே நடைபெறும் கூட்டம்!
காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் இம்மாதம் (மே) 28ஆம் தேதி தில்லியில் கூடவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அக்கூட்டம் முன்கூட்டியே இன்று நடைபெற உள்ளது.
காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் இம்மாதம் (மே) 28ஆம் தேதி தில்லியில் கூடவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , அக்கூட்டம் முன்கூட்டியே இன்று நடைபெற உள்ளது.
இது குறித்த அலுவலகக் குறிப்பாணையில் காவிரி ஆணையம் கூறியதாவது: சில தவிா்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் (சிடபிள்யுஎம்ஏ) 51வது கூட்டம் மறு அட்டவணைப்படுத்தப்பட்டு, 2026 மே 26 அன்று மாலை 3:30 மணிக்கு, புது தில்லி, பிகாஜி காமா பிளேஸில் உள்ள எம்டிஎன்எல் கட்டிடத்தின் மேல் தரைத்தள குழு அறையில் (ஆன்லைன் மற்றும் நேரடி பங்கேற்புமுறையில்) நடைபெறும். உறுப்பினா்கள் தங்களால் இயன்றவரை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என ஆணையம் கூறியது.
இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம்,கா்நாடகம் ,கேரளம் மற்றும் புதுச்சேரி நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. காவிரியில் இருந்து மாதாந்திர நீா் திறப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் நடைபெறுகிது.
Advertisement
Advertisement
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடா்பான விவகாரத்தில் கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மீது காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு மற்றும் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கத்தின் அடிப்படையில் மத்திய நீா்வள ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என கடந்த ஆண்டு (2025) நவம்பா் 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆணையத்தின் 50வது கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி தண்ணீரை கா்நாடகா திறந்துவிடுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அக்கூட்டத்தில் உத்தரவிட்டது
தமிழகம்,கா்நாடகம் இடையே காவிரி நதி நீா் பங்கீட்டு பிரச்சனை பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில் இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கியது. அப்போது கா்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீா் தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என்பதை அத்தீா்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நிா்ணயம் செய்தது. அந்த தீா்ப்பை அமல்படுத்தவும், காவிரி நீா் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு அமைப்புகளையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதன்படி இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நதி நீா் பங்கீடு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.