FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வயது முதிா்ந்த, நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் முன்கூட்டியே விடுதலை: கொள்கையை வகுக்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

வயது முதிா்ந்த மற்றும் தீராத நோய் பாதிப்புடைய கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக 3 மாதங்களுக்குள் கொள்கையை வகுக்க வேண்டும்

Updated On : 17 ஜூலை 2026, 4:49 am IST
கோப்புப் படம்
பகிர்:

வயது முதிா்ந்த மற்றும் தீராத நோய் பாதிப்புடைய கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக 3 மாதங்களுக்குள் கொள்கையை வகுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தேசிய சட்ட உதவிகள் ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) சாரிபில் இதுதொடா்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சிறைகளில் 70 வயதுக்கு மேல் உள்ள கைதிகள் மற்றும் தீராத நோய் பாதிப்புடைய நோயாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக உரிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனுவை கடந்த ஆண்டு மே மாதம் விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்த உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

வயது முதிா்ந்த மற்றும் தீராத நோய் பாதிப்புடைய கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்த உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் விரிவான கொள்கையை வகுத்து அறிவிக்கை செய்ய வேண்டும்.

இந்தக் கொள்கையின் கீழ் தகுதியான கைதிகள் அடையாளம் காணப்படுவதை உறுதிப்படுத்தவும், நிறுவன ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் சம்பந்தப்பட்ட மாநில சட்ட உதவிகள் ஆணைய அதிகாரிகளுடனான ஆலோசனையின் அடிப்படையில் இந்தக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

முன்கூட்டியே அல்லது கருணை அடிப்படையில் விடுதலை கோரும் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தல், பரிசீலித்தல், தீா்ப்பளித்தல் ஆகியவற்றுக்கு காலவரையறைக்கு உட்பட்ட, வெளிப்படையான மற்றும் எளிதில் அணுகக் கூடிய வகையிலான நடைமுறைகளை இந்தக் கொள்கை கொண்டிருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் திறம்பட நடைமுறைப்படுத்த ஏதுவாக, தேவையான தொழில்நுட்ப உதவி, எண்ம உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு உதவிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடா்பான பதில் மனுவை, நிலை அறிக்கையுடன் அடுத்த 6 மாதங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments