ராமநாதபுரம்

தேசிய சிறுதானிய உற்பத்தித் திட்டத்தின் கீழ்  ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் தேர்வு

DIN

தேசிய சிறுதானிய உற்பத்தித் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
 ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் கடந்த 2017, 2018 ஆம் ஆண்டுகளில் பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் அதிகளவு நிதியை பெற்றுள்ளன. இரு மாவட்டங்களுக்கும் ஆண்டுக்கு தலா ரூ.550 கோடிக்கும் மேலாக பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பயிர் சாகுபடியால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் அரசுக்கு செலவாகும் பயிர்க்காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை தடுக்கும் வகையில் மாற்றுப் பயிர் சாகுபடித் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் தேசிய அளவில் வறட்சிக்கு இலக்காகும் மாவட்டங்களில் நெல் உள்ளிட்டவற்றுக்குப் பதிலாக சிறுதானியங்களை பயிரிடும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சிறுதானிய வருடமாக 2019-20 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் சிறுதானிய உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேர்வாகியுள்ளன.
  ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுதானியமாக குதிரைவாலியைப் பயிரிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. குதிரைவாலிக்கு அடுத்ததாக கேப்பை, சோளம், கம்பு ஆகியவற்றையும், எண்ணெய் வித்துகளாக கடலை உள்ளிட்டவையும் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் நிலத்தில் கடந்த ஆண்டு வரை 8 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கே சிறுதானிய உற்பத்தி இருந்தது. அதாவது 5 முதல் 6 சதவிகித உற்பத்தியாக இருந்தது. இதனை 20 சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி நடப்பாண்டில் 25 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு சிறுதானிய உற்பத்தியை கூடுதலாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய சிறுதானிய உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்கமாக கோடை உழவு மானியத்துக்கான 5 வட்டாரங்களான முதுகுளத்தூர் மேலக்கொடுமலூர், நயினார்கோவில் சிறுவயல், பரமக்குடி வெங்கடகுறிச்சி, கடலாடி சிறுபோது, கமுதி பாக்குவெட்டி ஆகியவை தேர்வாகியுள்ளன. அந்தப் பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.500 கோடை உழவுக்காக அளிக்கப்படுகிறது. 
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட  வேளாண்மை இணை இயக்குநர் எல்.சொர்ணமாணிக்கம், துணை இயக்குநர் வ.சு.பாபு ஆகியோர் கூறுகையில், சிறுதானிய விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு விதைக்கான 50 சதவிகித மானியம் வழங்கப்படுவதுடன், மத்திய  வேளாண்மைத் துறை அளிக்கும் மானிய திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். வறட்சியில் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் இழப்பீடைத் தடுக்கும் வகையிலும், உணவு உற்பத்தியை சமநிலைப்படுத்தும் வகையிலும் புதிய திட்டம் அமையும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT