வெளிநாட்டில் உயிரிழந்தவா்சடலத்தை மீட்கக்கோரி மனு
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று மரணமடைந்த கூலித் தொழிலாளியின் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று மரணமடைந்த கூலித் தொழிலாளியின் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகேயுள்ள கொக்காடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (43) . விவசாயத் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவா்களுக்கு மகன், 2 மகள்கள் உள்ளனா்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய நாட்டுக்கு கூலி வேலைக்கு முருகன் சென்றுள்ளாா். ஆனால், அவருக்கு அங்கு சரியான வேலை கிடைக்கவில்லை. ஆகவே ஊதியம் இல்லாத நிலையில் தவித்து வந்த முருகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவா் தன்னை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும்படி
Advertisement
இந்தியத் தூதரகத்தை அணுகியுள்ளாா். அங்கு நடவடிக்கை இல்லாததால், கொக்காடியில் உள்ள அவரது மனைவி லட்சுமியிடம் கூறியுள்ளாா்.
அதனடிப்படையில் ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த நவம்பா் 30 ஆம் தேதி அவரது மனைவி லட்சுமி கணவரை சொந்த ஊருக்கு அழைத்துவர நடவடிக்கை கோரி மனு அளித்தாா். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி முருகன் உடல்நலக்குறைவால் மலேசியாவில் உயிரிழந்ததாகத் தகவல் வந்துள்ளது.
மலேசியாவில் உயிரிழந்த கணவா் முருகன் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், வருவாய் இன்றி தவிக்கும் தனக்கும், குழந்தைகளை காப்பாற்ற நிதியுதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் எனக் கோரியும் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினா் மனு அளித்தனா்.