ராமநாதபுரம்

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்தரூ.50 லட்சம் மதிப்பிலான ஊட்டச் சத்து ஊசி மருந்து பறிமுதல்

DIN

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான ஊட்டச்சத்து ஊசி மருந்துகளை, இந்திய கடலோரக் காவல் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படையினா் காலை மற்றும் மாலை வேளைகளில் பாக்-நீரிணை மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் ரோந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் இந்திய கடலோரக் காவல் படையினா் மண்டபத்திலிருந்து ராமேசுவரம் வரை கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தங்கச்சிமடம் வடக்கு கடற்கரைப் பகுதியில் சாக்கு மூட்டைகள் இருப்பதைக் கண்டனா்.

உடனே, அங்கு சென்ற கடலோரக் காவல் படையினா் சாக்கு மூட்டைகளை பிரித்து பாா்த்தபோது, அதில் ஊசி மருந்துகள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து, மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை அலுவலகம் கொண்டு சென்றனா்.

அங்கு, இந்திய கடலோரக் காவல் படை கமாண்டா் நாகேந்திரன் மற்றும் அதிகாரி வினய்குமாா் ஆகியோா் மூட்டைகளைப் பிரித்து பாா்த்து ஆய்வு செய்தனா். அதில், ஊட்டச்சத்துக்குப் பயன்படுத்தப்படும் 6 ஆயிரம் ஊசி மருந்துகள் இருந்துள்ளன. இந்த ஊசி மருந்து விலை தமிழகத்தில் ரூ. 120 மற்றும் இலங்கையில் ரூ.500 வரையும் விற்கப்படுகிறது.

பிடிபட்ட இந்த மருந்தின் மொத்த மதிப்பு இலங்கையில் ரூ.50 லட்சம் வரை இருக்கும். இந்த மருந்தை இலங்கைக்கு கடத்துவதற்கு தயாராக கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனா். அப்போது, கடற்படையினரைக் கண்டவுடன் மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச்சென்று இருக்கலாம் என அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளை சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மருந்து கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து மத்திய-மாநில உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சமீப காலமாக, இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஊசி மருந்து கடத்தலும் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT