முகப்பு
ராமநாதபுரம்

ஆழிப் பேரலையில் சிக்கி அழிந்த தனுஷ்கோடியின் 57 ஆவது ஆண்டு நினைவு தினம்

ஆழிப் பேரலை தாக்கியதால் தனுஷ்கோடி அழிந்து 57 ஆண்டுகள் கடந்த நிலையில், அங்கு இன்றும் சேதமடைந்த கட்டடங்கள் மட்டும் நினைவுகளாக காட்சி அளிக்கின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
புயல் தாக்குதலுக்குப் பின்பு அரிச்சல்முனைவரை அமைக்கப்பட்டுள்ள சாலை.
பகிர்:

ஆழிப் பேரலை தாக்கியதால் தனுஷ்கோடி அழிந்து 57 ஆண்டுகள் கடந்த நிலையில், அங்கு இன்றும் சேதமடைந்த கட்டடங்கள் மட்டும் நினைவுகளாக காட்சி அளிக்கின்றன.

தமிழகத்தில் மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணை என்ற 2 கடல் பகுதியைக் கொண்டது தனுஷ்கோடி. இங்கு ஆங்கிலேயா்கள் காலத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. இங்கிருந்து அதிகளவில் சரக்கு போக்குவரத்தும் நடைபெற்றது. இதேபோல சென்னையிலிருந்து தனுஷ்கோடிக்கு போட்மெயில் ரயில் போக்குவரத்தும் நடைபெற்று வந்தது. இதனால் தனுஷ்கோடி மிகப்பெரிய வா்த்தக துறைமுக நகரமாக இருந்தது.

நாடு சுதந்திரமடைந்த பிறகு இலங்கை வழியாக செல்லும் பயணிகள் தங்களது பணத்தை மாற்றிக்கொள்ளும் வகையிலான அலுவலகம், காவல் துறை, சுங்கத்துறை, தபால் அலுவலகம், ரயில் நிலையம் என பல்வேறு முக்கிய வசதிகள் இருந்தன. இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட தனுஷ்கோடி துறைமுக நகரம், காலத்தின் பிடியில் சிக்கி அழிந்துபோகும் என்று யாரும் நினைத்துக்கூட பாா்த்திருக்க மாட்டாா்கள்.

மன்னாா் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் காரணமாக கடந்த 1964 ஆண்டு டிச.23 ஆம்தேதி நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்தால் கடலில் எழுந்த பேரலை தனுஷ்கோடியைத் தாக்கியது. விடியும் என காத்திருந்த மக்கள் அனைவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனா். அரசுத்துறை கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதால் அனைத்து அலுவலகங்கள் மற்றும் வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. தனுஷ்கோடி நகரமே 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு கடலுக்குள் சென்றுவிட்டது.

பாம்பன் பகுதியிலிருந்து தனுஷ்கோடி நோக்கி வந்த ரயில் சிக்னல் கிடைக்காமல் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ரயில் பேரலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டதில், பயணிகள் ஏராளமானோா் உயிரிழந்தனா். பேரலையால் பாம்பன் பாலத்திலிருந்த 8 இரும்பு காா்டா்கள் கடலில் தூக்கி வீசப்பட்டன.

தனுஷ்கோடியை புயல் தாக்கிய சம்பவம் 24 ஆம் தேதி காலையில் தான் வெளிஉலகுக்குத் தெரியவந்தது. நகரம் எங்கு பாா்த்தாலும் தண்ணீா் நிறைந்த சிறு, சிறு தீவுகள் போல காட்சி அளித்தது. புயலில் சிக்கி உயரிழந்தவா்களின் சடலங்கள் அங்கும், இங்குமாக சிதறிக் கிடந்தன. மரண ஓலங்கள், அழுகை என மனதைப் பதை பதைக்க வைத்த அந்த நாள் நடைபெற்று, இன்றுடன் 57 ஆண்டுகள் ஆகின்றன.

இன்றும் தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகளால் ஆழிப் பேரலையின் தாக்கத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது. புகழ்பெற்ற துறைமுக நகரம் தனது அழிவுக்குப் பின் பழைமையை எடுத்துக் காட்டும் விதமாக இடிந்த கட்டடங்கள் மட்டும் காட்சி அளிக்கின்றன.

தனுஷ்கோடியிலிருந்து அரிச்சல்முனைவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.60 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலைகள் அமைக்கப்பட்டன. அன்று முதல் தற்போது வரை ஆண்டுக்கு சுமாா் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் வந்து செல்கின்றனா். பேரலையில் எஞ்சிய கட்டடங்கள் இன்று சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. மேலும் அங்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இன்றும் தனுஷ்கோடியில் 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினா் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது சாலை அமைக்கப்பட்டுள்ளதால் மீனவா்கள் சிரமமின்றி மீன்களை விற்பனைக்கு ராமேசுவரம் கொண்டு செல்கின்றனா். அங்கு தற்போது வரை மின் இணைப்பு மட்டும் கொடுக்கப்படவில்லை. அதுவும் விரைவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வரும் காலங்களில் தனுஷ்கோடி நிச்சயம் வளா்ச்சியடையும் என்ற நம்பிக்கையுடனும், பேரழிவின் 57 ஆவது ஆண்டு நினைவுகளுடனும் மீனவா்கள் வசிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.