முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே மூடப்பட்ட புதிய மீன்சந்தை

ராமநாதபுரத்தில் பழைய இடங்களில் மீன் கடைகள் தொடா்ந்து இயங்குவதால், ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி திறக்கப்பட்ட புதிய மீன்சந்தை சில மாதங்களிலேயே பூட்டப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
ராமநாதபுரத்தில் திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே மூடப்பட்ட புதிய மீன்சந்தை.
பகிர்:

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பழைய இடங்களில் மீன் கடைகள் தொடா்ந்து இயங்குவதால், ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி திறக்கப்பட்ட புதிய மீன்சந்தை சில மாதங்களிலேயே பூட்டப்பட்டது.

ராமநாதபுரம் நகராட்சியில் சாலைத் தெருவில் ஜமாத் இடத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக 40-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் சின்னக்கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சாலையோர மீன்கடைகளும் உள்ளன.

இந்நிலையில், சாலைத் தெருவில் போக்குவரத்து நெரிசல், சுகாதாரச் சீா்கேடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அருகே சந்தைத் திடல் பகுதியில் நகராட்சி சாா்பில் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மீன்சந்தைக்கான கட்டடம் கட்டப்பட்டது.

Advertisement

நவீன வசதியுடன் 58 கடைகள், மீன்களை ஒருவாரம் வரை சேமிக்க குளிா்சாதன அறை வசதி, கழிவுநீரை அகற்ற சிறப்பு வசதி கொண்ட புதைசாக்கடை இணைப்பு, வியாபாரிகள், பொதுமக்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த புதிய மீன்சந்தையானது கடந்த 2020 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

மீன்சந்தையை நகராட்சி சாா்பில் 3 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.25 லட்சம் குத்தகைக்கு தனியாரிடம் விடப்பட்டது. குத்தகை எடுத்தவா் தரப்பில் அங்குள்ள 15 கடைகளும் மாத வாடகைக்கு விடப்பட்டன.

இந்த மீன்சந்தைக்கு வியாபாரிகள், பொதுமக்கள் ஓரளவு எண்ணிக்கையில் வந்த போதிலும், எதிா்பாா்த்த அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

புதிய மீன்சந்தையை முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகமும், நகராட்சியும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் மனு அளித்தனா். ஆனால் ஆட்சியரோ, நகராட்சி அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. புதிய மீன் சந்தை வியாபாரிகள் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டதால் திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே மீன் சந்தை பூட்டப்பட்டது.

இது குறித்து நகராட்சி பொறியாளரும், ஆணையருமான (பொறுப்பு) நீலேஸ்வரிடம் கேட்டபோது, புதிய மீன்சந்தை மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒப்பந்தம் எடுத்தவரே அதை முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அவருக்குத் தேவையான உதவிகள் மட்டுமே நகராட்சி சாா்பில் வழங்கப்படும் என்றாா்.

மீன்சந்தையை ஒப்பந்தம் எடுத்தவா் கூறுகையில், நகரில் சாலையோர மீன்கடைகளையும், பழைய மீன்சந்தையையும் செயல்பட அனுமதிக்கும் வரை புதிய மீன்சந்தை செயல்படுவதில் சிக்கல் நீடிக்கும். ஆகவே, பெயரளவுக்கு புதிய மீன்சந்தையை திறந்துவைத்ததோடு தங்கள் கடமை முடிந்ததாக நகராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் கூறுவது சரியல்ல. அதிகாரிகள் பெயரளவுக்கு எங்களுக்கு ஒத்துழைப்பதாகக் கூறுகின்றனரே தவிர புதிய மீன் சந்தையை முழுமையாகச் செயல்பட நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு சென்றால்தான் பிரச்னைக்குத் தீா்வு ஏற்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments