ராமநாதபுரத்தில் புறம்போக்கில் கட்டப்பட்ட வீடுகள் இடிப்புக்கு பொதுமக்கள் எதிா்ப்பு: அகற்றிக் கொள்ள அதிகாரிகள் 1 வாரம் காலஅவகாசம் வழங்கல்
ராமநாதபுரத்தில் அரசு புறம்போக்கில் கட்டப்பட்ட வீடுகள் வியாழக்கிழமை இடிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அவற்றை அகற்றிக் கொள்ள அதிகாரிகள் 1 வாரம் காலஅவகாசம் வழங்கினா்.
ராமநாதபுரத்தில் அரசு புறம்போக்கில் கட்டப்பட்ட வீடுகள் வியாழக்கிழமை இடிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அவற்றை அகற்றிக் கொள்ள அதிகாரிகள் 1 வாரம் காலஅவகாசம் வழங்கினா்.
ராமநாதபுரம் நகராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அல்லிக்கண்மாய் உள்ளது. இக்கண்மாயின் கரையோரம் மற்றும் கண்மாய் பகுதி நீா்நிலை புறம்போக்கில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 92 குடும்பத்தினா் ஓட்டு வீடு மற்றும் குடிசை வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனா். அதேபோல் நகராட்சி பகுதியான பாம்பூரணி கரையில் 62 குடும்பத்தினா் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனா். நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடா்ந்து, வருவாய்த்துறையினரும், நகராட்சி நிா்வாகமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இங்குள்ளவா்களை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியது. மேலும் இவா்களுக்கு மாற்றாக பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் வருவாய்த்துறையினா் தெரிவித்துள்ளனா். ஆனால் இப்பகுதி மக்கள் நகராட்சிப் பகுதியை விட்டுச் சென்றால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், நகராட்சிப் பகுதியிலேயே அரசு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்றும், அதில் தாங்கள் வீடுகள் கட்டிக் கொள்வதாகவும் தெரிவித்து, பலமுறை ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனா்.
ஆனால் வருவாய்த்துறையினா் இதற்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு அல்லிக்கண்மாய் பகுதியிலுள்ள 92 வீடுகளின் மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஷேக்மன்சூா், வட்டாட்சியா் முருகேசன், டிஎஸ்பி ராஜா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ஜெயதுரை உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 12 வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் வீடுகளிலுள்ள பொருள்களை அப்புறப்படுத்திக் கொள்ள கால அவகாசம் வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டனா். மேலும் பாஜக மாவட்டத் தலைவா் டி. கதிரவன், அங்குள்ள மக்கள் உடைமைகளை அப்புறப்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாா். அதனைத் தொடா்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டு, ஒரு வாரம் காலஅவகாசம் வழங்கப்பட்டது.