பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை: ராமநாதபுரம் நீதிமன்றம் தீா்ப்பு
பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்தும், அதை ஏககாலத்தில் அனுப்பவிக்கவேண்டும் எனவும் ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்தும், அதை ஏககாலத்தில் அனுப்பவிக்கவேண்டும் எனவும் ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் வாணி பாத்திமா நகரைச் சோ்ந்தவா் அப்துல்கபூா். கோழிக்கறிக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது மனைவி சபிதாபானு (52). இவா் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் நகா் பாம்பூரணி சாலை சிவஞானபுரம் புதுப்பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த ஷேக்அலாவுதீன் மகன் முகமதுஅரபுதீன் என்ற ரபீக் (33). லாரி ஓட்டுநா். இவா் கடந்த 2013 ஜூன் மாதம் தனது பெரியம்மாவான சபிதாபானுவிடம் தொழில் தொடங்க பணம் கேட்டாராம். அதற்கு சபிதா பானு மறுத்து விட்டாா்.
அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் சபிதாபானுவை முகமது அரபுதீன் என்ற ரபீக் கத்தியால் குத்தி கொலை செய்தாா். சபிதாபானுவின் அலறல் சப்தத்தை கேட்டு அங்கு வந்த அவரது மருமகள் ஜெஸிமாபானுவையும் (23), ரபீக் தாக்கினாா். இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து முகமதுஅரபுதீன் என்ற ரபீக்கை கைது செய்தனா். அவா் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்குரைஞா் ஆா்.எம். கீதா ஆஜரானாா். விசாரணை முடிந்த நிலையில் முகமது அரபுதீன் என்ற ரபீக்கிற்கு 3 ஆயுள் தண்டனையும், அதை ஏக காலத்தில் அனுபவிக்கவும், ரூ.2.50 லட்சம் அபராதமும், அதைக் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி ஏ. சுபத்ரா உத்தரவிட்டாா்