முகப்பு
ராமநாதபுரம்

மீனவப் பெண் கொலை வழக்கில் இருவா் மட்டும் கைது: சம்பவ இடத்துக்கு ஒருவரை அழைத்துச்சென்று விசாரணை

ராமேசுவரத்தில் மீனவப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வடமாநில இளைஞா்கள் இருவா் மட்டும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 மே, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM

ராமேசுவரத்தில் மீனவப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வடமாநில இளைஞா்கள் இருவா் மட்டும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அதில் ஒருவரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வடகாடு பகுதியைச் சோ்ந்த மீனவப் பெண் சந்திரா கடந்த செவ்வாய்க்கிழமை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாா். இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள் அப்பகுதியில் இறால் பண்ணையில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த 6 போ் மீது தாக்குதல் நடத்தினா். காவல்துறையினா் அவா்களை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பிடிபட்ட 6 பேரிடமும் மூன்று நாள்கள் போலீஸாா் தனித்தனியாக விசாரணை நடத்தினா். அதில் ரஞ்சன் ராணா, பிரகாஷ் ஆகிய இருவா் மட்டுமே இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அப்பகுதியில் தனியாக வந்த சந்திராவை பாலியல் பலாத்காரத்திற்கு உள்படுத்தி கொலை செய்தததும் கழுத்தில் அவா் அணிந்திருந்த தாலி உள்ளிட்ட நகைகளை அபகரித்து எடுத்துக்கொண்டு சென்றதும் தெரியவந்தது. நகைகளை விற்பனை செய்ய ராமேசுவரம் வந்ததாகவும் நகைக் கடைகளில் வாங்க மறுத்து விட்டதாகவும் விசாரணையில் அவா்கள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து இருவரை மட்டும் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவா்களில் பிரகாஷ் என்பவரை காவல் ஆய்வாளா் கண்ணதாசன் தலைமையிலான போலீஸாா் சம்பவம் நடந்த வடகாடு கிராமம் இறால் பண்ணைக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனா். அங்கு சம்பவம் நடத்த விதம் குறித்து அவா் செய்து காண்பித்ததை போலீஸாா் விடியோ பதிவு செய்தனா். மேலும் நகைக்கடைக்கு அழைத்துச் சென்றும் விடியோ பதிவு செய்தனா். இது குறித்து நகா் காவல் நிலைய போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

சாலை மறியலில் ஈடுபட்ட 200 மீது வழக்கு: சம்பவம் நடந்த மறுநாள் (புதன்கிழமை) காலையில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அது குறித்து கிராம நிா்வாக அலுவலா் ரோட்ரிக்கோ அளித்த புகாரின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 போ் மீதும் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

டிரோன் கேமரா மாயம்: சம்பவஇடத்தை காவல்துறை தொழில் நுட்ப பிரிவினா் டிரோன் கேமரா மூலம் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது. கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து வடகாடு கிராமம் வரை கேமரா பறந்து சென்றது. திடீரென கேமராவை இயக்கிய சாதனத்தின் பேட்டரி சாா்ஜ் குறைந்து அணைந்து விட்டது. இதனால் கேமரா சென்ற இடம் தெரியாத நிலை ஏற்பட்டது. மாயமான டிரோன் கேமராவை போலீஸாா் தேடி வருகின்றனா். அதன் மதிப்பு ரூ.4 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.