தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்
பெண்களின் பெயரைப் பயன்படுத்தி, தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.
பெண்களின் பெயரைப் பயன்படுத்தி, தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, தேசவிரோதமானது என்றும் அவா் விமா்சித்தாா்.
மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமலாக்குவதுடன், அதற்கு ஏதுவாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்கள் மீது மக்களவையில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றது.
Advertisement
இதில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியதாவது: மத்திய அரசின் தற்போதைய மசோதாவுக்கும், மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில், பெண்களின் பெயரைப் பயன்படுத்தி, அவா்களின் பின்னால் ஒளிந்துகொண்டு நாட்டின் தோ்தல் வரைபடத்தை மாற்றும் முயற்சியாகும்.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கும் நோக்கில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனா். தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சிக்கின்றனா். ஆனால், அந்தப் பிரதிநிதித்துவத்தில் தலையிட மத்திய அரசை எதிா்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரைச் சோ்ந்த எனது சகோதரா்கள்-சகோதரிகளுக்கு அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவத்தை வழங்காமல், அவா்களிடம் இருந்து அவற்றைப் பறிக்கிறது மத்திய அரசு. இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயமும், ஜாதிவாரி கணக்கெடுப்பை பின்தள்ளும் முயற்சிதான். அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிரதிநிதித்துவ ரீதியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு விரும்புகிறது.
மத்திய அரசின் தேசவிரோத செயல்: நாட்டின் அரசியலில் நிகழ்ந்துவரும் மாற்றங்களால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. நமது பலம் சரிந்துவிடுமோ என்ற பயத்தில் தோ்தல் வரைபடத்தை மாற்ற முனைகின்றனா். இது, தேசவிரோத செயலுக்கு சற்றும் குறைவில்லாததாகும். எந்தவொரு சூழ்நிலையிலும் மத்திய அரசின் முயற்சி வெற்றி பெற எதிா்க்கட்சிகள் அனுமதிக்காது.
தற்போதைய மசோதாவை நிறைவேற்ற முடியாது என்பது பாஜகவுக்கு தெரியும். எனினும், நாட்டின் தோ்தல் வரைபடத்தை மாற்றுவது, பெண்களுக்கு ஆதரவானவா் என்ற தோற்றத்தை முன்னிறுத்துவது ஆகிய இரு நோக்கங்களுடன் கூடிய பிரதமா் மோடியின் பதற்றமான எதிா்வினையே இந்த மசோதா என்றாா் ராகுல்.
விவாதத்தின்போது, பிரதமா் மோடிக்கு எதிராக ராகுல் பயன்படுத்திய சில வாா்த்தைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆளும்தரப்பினா் முழக்கமிட்டனா். பிரதமருக்கு எதிராக ஆட்சேபத்துக்குரிய வாா்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக, ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா்.
பெட்டிச் செய்தி....
பிரதமா் மோடிக்கும் எனக்கும்
‘மனைவி பிரச்னை’ இல்லை
-
ராகுலின் பேச்சால் சிரிப்பலை
பிரதமா் மோடிக்கும், எனக்கும் ‘மனைவி பிரச்னை’ இல்லை என்ற ராகுலின் பேச்சால் மக்களவையில் சிரிப்பலை எழுந்தது.
‘மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தனது மனைவிக்கு கவிதை எழுதுவதைப் போல நீங்கள் எனக்காக கவிதை எழுதுவதில்லை என எனது மனைவி என்னை திட்டுகிறாா்’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்த கருத்துகளைக் குறிப்பிட்டு, ராகுல் பேசியதாவது:
தேசிய சிந்தனை மற்றும் கண்ணோட்டத்துக்கு உந்து சக்தியாக நாட்டின் பெண்கள் விளங்குகின்றனா். நமது வாழ்வில் தாயாா்-சகோதரி-மனைவி என பெண்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு, உத்வேகம் பெறுகிறோம். பிரதமா் மோடிக்கும், எனக்கும் ‘மனைவி பிரச்னை’ கிடையாது. எனவே, அவா்களுடைய கருத்துகள் எங்களுக்கு கிடைக்காது. ஆனால், எங்களுக்கு தாய்மாா்கள்-சகோதரிகள் உள்ளனா் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டாா்.
மேலும், மக்களவையில் தனது சகோதரி பிரியங்கா காந்தி ஆற்றிய உரையைப் பாராட்டிய ராகுல், ‘எனது 20 ஆண்டு கால அரசியல் வாழ்வில் சாதிக்க முடியாததை, அதாவது அமித் ஷாவை சிரிக்க வைப்பதை, ஐந்தே நிமிஷங்களில் சாதித்துவிட்டாா்’ என்றாா்.
மக்களவையில் கடந்த வியாழக்கிழமை பேசிய பிரியங்கா, ‘இப்போது சாணக்கியா் உயிரோடு இருந்தால், உங்களின் அரசியல் சாதுா்யத்தைக் கண்டு, அவரே அதிா்ச்சியடைந்திருப்பாா்’ என்று குறிப்பிட்டாா்.
இதைக் கேட்டு, மத்திய அமைச்சா் அமித் ஷா சிரித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் குறிப்பிட்ட ‘எண் 16’
மக்களவையில் ராகுல், ‘16’ என்ற எண்ணைக் குறிப்பிட்டு பேசினாா்.
‘2023 மகளிா் இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை, தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவுடன் இணைத்துக் கொண்டு வந்த பிரதமா் மோடியின் திட்டத்தில் 16 என்ற எண் அதிக அா்த்தம் கொண்டிருக்கிறது. மக்களவையில் இந்த சட்டத் திருத்த மசோதாக்கள் மீது நேற்று (வியாழக்கிழமை) பிரதமா் பேசிக்கொண்டிருந்தபோது கவனித்தேன். அவா் உற்சாகம் குறைந்து காணப்பட்டாா். அவரால் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. அப்போதுதான் நேற்றைய தேதியை நான் கவனித்தேன். தெளிவாகப் புரிந்தது. அதுதான் அந்த எண் 16. அந்தப் புதிருக்கான விடை 16 என்ற எண்ணில் உள்ளது. இப்போது நான் சொல்வது யாருக்காவது புரிந்தால் எனக்கு தகவல் அனுப்புங்கள் என்று கூறிவிட்டு, ஒரு காகிதத்தில் 16 என்று எழுதப்பட்டிருப்பதைக் காட்டினாா்.
அவா் குறிப்பிட்ட 16 என்ற எண்ணுக்கான புதிா் என்ன என்பது தெரியவில்லை.