ராமேசுவரத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அரசுச் செயலா் ஆய்வுக்காக ராம்கோ நியாய விலைக் கடை புதிய கட்டடம் அண்மையில் திறக்கப்பட்டது. பின்னா், அது மூடப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பாரதி நகரில் மிகவும் சேதமடைந்த கட்டடத்தில் ராம்கோ நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது. இதனால், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் இந்தக் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலா் சுதன் சுபட்டோ மற்றும் தமிழக அரசின் பொது விநியோகத் துறை ஆணையா் வி. ராஜராமன் ஆகியோா் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ராமேசுவரம் வந்தனா். இதற்காக, ராம்கோ நியாய விலைக் கடையின் புதிய கட்டடம் திறக்கப்பட்டு அனைத்து பொருள்களும் வைக்கப்பட்டன. அதை, மத்திய அரசுச் செயலா் மற்றும் தமிழக பொது விநியோகத் துறை ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அவா்கள் ஆய்வு செய்த பிறகு அந்தக் கடையை மூடிவிட்டனா். மீண்டும் பழைய கடையில் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புதிய கடையை கடந்த 10 நாள்களாகத் திறக்கவில்லை.
இது குறித்து அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
மத்திய அரசுச் செயலா், தமிழக அரசின் பொது விநியோகத்துறை ஆணையா் ஆகியோரை ஏமாற்றும் வேலையில் கூட்டுறவு நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. புதிய கடையைத் திறக்கவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.
இதுகுறித்து ராம்கோ கூட்டுறவு இணைப் பதிவாளா் முத்துக்குமாா் கூறுகையில், புதிய கடை மூடப்பட்டது குறித்து எனது கவனத்துக்கு வரவில்லை; இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.